Saturday 22 December 2012

வரப்புயர நீர் உயரும், நீர் உயர நெல் உயரும் ...


திருப்பூரின் தொழில் வளர்ச்சி குறித்து இன்றைக்கும் நாம் பெருமிதமடைகிறோம். ஆனால், நம் வர்த்தகத்தில் ஏற்பட்ட முன்னேற்றம் வாழ்க்கைச் சூழலிலும் பிரதிபலிக்கிறதா? என்று கேட்டுக்கொள்வதுதான், நமது வளர்ச்சி பற்றிய பார்வையை முழுமையாக்கிடும்.

எந்திர வாழ்க்கை:
குறுகிய காலத்தில், கூடுதலானோர் இடம்பெயர்ந்து குடியேறியுள்ள நகரத்தில் நாம் வசிக்கிறோம். திருப்பூர் தொழில் சூழலின் தேவையும், மாநிலத்தின், நாட்டின் பல பகுதிகளில் மக்கள் சந்தித்துவரும் நெருக்கடியும் ஏராளமானோர் இவ்வூரைத் தேடிவரக் காரணமாக அமைந்துள்ளது. இரவு பகல் பாராமல் உழைப்பைச் செலுத்தும் அவர்கள் இயந்திரங்களோடு இயந்திரமாகவே வாழ்வின் பெரும்பகுதியைச் செலவிடுகின்றனர். நகர உள்கட்டமைப்பில் உள்ள குறைபாடுகள் அவர்கள் வாழ்வில் சுமையை அதிகரிக்கின்றன. நெருக்கடிக் காலகட்டத்தில், இங்கு வாழவே முடியாத நிலைமையையும் அது ஏற்படுத்திவிடுகிறது.

வாழ்விடக் கோரிக்கை:
உதாரணமாக, குடியிருப்பு வசதிகளை எடுத்துக் கொள்வோம். திருப்பூரின் மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் வசிப்பது, நெருக்கடியான குடிசைப் பகுதிகளில்தான். இப்படி பழைய மாநகராட்சியில் 102ம், புதிதாக இணைக்கப்பட்ட ஊராட்சிகளில் 77ம் என மொத்தம் 179 குடிசைப் பகுதிக் குடியிருப்புகள் இருக்கின்றன. அப்பகுதிகளில் போதுமான சாலைகளோ, வடிகால் வசதிகளோ இல்லை. குப்பை அள்ளுவதற்கு ஏற்படும் தாமதத்தால் அப்பகுதிகள் நரகமாகிவிடுகின்றன. அவர்களின் வருமானத்தில் பெரும்பகுதியை மருத்துவச் செலவுகள் உறிஞ்சிக் கொள்கின்றன. திறன் மிக்க தொழிலாளர்களின் வேலை நாட்கள் வீணாகின்றன, சேமிப்பு கரைந்து கடனாளியாகவும் ஆக்குகிறது. இந்தப் பின்னணியில்தான் இலவச வீட்டுமனை, தொழிலாளர்களுக்கான அடுக்குமாடி குடியிருப்புகள், உழைக்கும் மகளிர் விடுதிகள் ஆகிய திட்டங்களின் மூலம் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும்.ராயபுரம் மிலிட்டரி காலனியில் பல ஆண்டுகளாக வசிக்கும் மக்கள் பட்டா கேட்டு போராடியதைத் தொடர்ந்து ஒரு பகுதியினருக்கு பட்டா கொடுக்கப்பட்டது. மீதுமுள்ளோருக்கும் பட்டா வழங்கப்பட வேண்டும். இது தவிர, அரசு ஆவணங்களில் நீர்நிலையாக குறிக்கப்பட்டுள்ளபோதும், பல ஆண்டுகளாக மக்கள் குடியிருப்புகளாக மாறியுள்ள பகுதிகளில் பல்லாயிரக்கணக்கானோர் வசிக்கின்றனர். (உதாரணமாக: ஜம்மனை, சுகுமார் நகர், சத்யா நகர், முத்தையன் நகர், கே.வி.ஆர் நகர்)அப்பகுதிகளை வகை மாற்றம் செய்து அல்லது மாற்று இடத்தில் பட்டா கொடுக்க வேண்டும்.

குடிநீர் விநியோகம்:
அதேபோல், உள்கட்டமைப்பு குறைபாட்டால், கடுமையான பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டிருப்பது குடிநீர் விநியோகம். சில மாதங்களாக மின் வெட்டும் சேர்ந்துகொண்டபோது, 10, 15 முதல் ஒரு மாத இடைவெளியில்தான் குடிநீர் விநியோகம் இருக்கிறது. இந்த நிலையைக் கண்டித்து மக்கள் போராட்டங்கள் தன்னிச்சையாக நடக்கின்றன. இதில் சிறப்பு கவனமெடுத்து, குடிநீர் விநியோகத்தை சமச்சீராக்க தொடர்ந்து வலியுறுத்தியதன் பேரில், தற்போது சில பகுதிகளில் குடிநீர் விநியோகம் முறைப்படுத்தப்பட்டுள்ளது. 3 வது குடிநீர் திட்டத்தில் அதிக விலை கொடுத்து தண்ணீர் வாங்கியும் விநியோகிக்க முடியாத நிலை உள்ளது. மிக அவசியமான இடங்களில் புதிய நீரேற்று மையங்கள் அமைப்பது உடனடித் தேவை. அத்துடன் இப்போதைய பற்றாக்குறையையும், எதிர்காலத் தேவையையும் கணக்கில் கொண்டு புதிய குடிநீர் திட்டம் உருவாக்க வேண்டும்.

குடும்ப அட்டை பிரச்சனை:
இடம் பெயர்ந்த தொழிலாளர்கள், ரேசன் அட்டைகள் வாங்குவது குதிரைக் கொம்பாக அமைந்துவிடுகிறது. தொழில், வேலைவாய்ப்பை நாடி, அனுதினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து குவிகின்றனர். இந்த பிரத்யேக சூழலைக் கணக்கில் கொண்டு, புதிய ரேசன் அட்டை வழங்கும் நடைமுறைகளை எளிதாக்க வேண்டும். நிர்வாகங்கள் கணினிமயமாகியிருக்கும் வாய்ப்பை பயன்படுத்தி, பெயர் சேர்ப்பதையும், முகவரி மாற்றுவதிலும், புதிய குடும்ப அட்டைகள் வழங்குவதிலும் உள்ள தாமதம் போக்கப்பட வேண்டும்.

நிர்வாகக் கட்டமைப்பு:
இடம்பெயர்ந்த மக்கள், தங்கள் தேவைகளுக்காக அரசு நிர்வாகத்தை கூடுதலாக நாடுவார்கள். அதற்கேற்ற நிர்வாகக் கட்டமைப்பு ஏற்படுத்திட வேண்டும். திருப்பூர் வட்டாட்சியர் அலுவலகம், குடிமைப்பொருள் வட்டாட்சியர் அலுவலகங்கள் இரண்டாக பிரிக்கப்பட்டு, காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். குறிப்பாக பள்ளி, கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையின்போது கடுமையான நெருக்கடியை இது ஏற்படுகிறது. சென்றமுறை தாசில்தார் அலுவலகத்தில் நேரில் சென்று, சிறப்பு ஏற்பாடுகளைச் செய்ததாலேயே பிரச்சனையை சமாளிக்க முடிந்ததென்ற அனுபவமும் இங்கே குறிப்பிடத்தக்கது. திருப்பூர் மாவட்டமாகியிருக்கும் நிலையில், அனைத்து துறை தலைமை அலுவலகங்களும், இன்னும் ஏற்படுத்தப்படவில்லை. அவற்றை உடனடியாக ஏற்படுத்த வேண்டும்.

போக்குவரத்துக் கட்டமைப்பு:
திருப்பூரை வடக்கும், தெற்குமாக பிரிக்கும் ரயில் பாதையைக் கடக்க அறிவிக்கப்பட்ட ரயில்வே மேம்பாலங்கள் நடைமுறைக்கு வரவேண்டும். கூலிபாளையத்திலும், வஞ்சிபாளையத்திலும் ஓரளவு பணிகள் நடந்துள்ளன. அதே திட்டத்தில் திருப்பூரின் மையப்பகுதியில் திட்டமிடப்பட்ட 2 பாலங்கள் (ரூ.7 கோடி மதிப்பிலும், ரூ.14 கோடி மதிப்பிலும்)இன்னும் காகித அளவிலேயே இருக்கின்றன. நெடுஞ்சாலைத்துறை அமைச்சரிடமும், சட்டமன்றத்திலும் இப்பிரச்சனை பலமுறை எழுப்பப்பட்டது. அடிமேல் அடி வைத்துத்தான் அம்மி நகரும் என்பதைப் போல், இப்போது கையகப்படுத்த வேண்டிய நிலங்கள், அவற்றிற்கான இழப்பீடு குறித்த கோப்பு தயாரிக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

பாதிக் கிணறு தாண்டுவது!
மறுபக்கம், அணைப்பாளையம் ரயில்வே பாலம் உள்பட சில பாலங்கள் முறையாக நிலம் கையகப்படுத்தாததால் பாதி கட்டிய நிலையில் நின்றுவிட்டன. அரசு நிதி ஒதுக்கியும், நிர்வாகக் கேடுகளால் திட்டங்கள் தாமதமாக வருவது வருந்தத்தக்கதே. அரசு நிதி கிடைத்தும்,‘உள் விளையாட்டரங்கம்’ கட்டும் பணி, நிர்வாகக் காரணங்களால் தாமதமாகிவந்தது. பெரு முயற்சிக்கு பின்னர், சிக்கண்ணா கல்லூரி நிர்வாகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. இது போன்றே அரசு மருத்துவமனையை மருத்துவக் கல்லூரியாக தரம் உயர்த்துவதையும், திருப்பூருக்கென அறிவிக்கப்பட்ட இ.எஸ்.ஐ மருத்துவமனை திட்டத்தையும் விரைவாக அமலாக்கினால் ஏழைத் தொழிலாளர்களின் மருத்துவச் செலவுகள் கணிசமாக குறையும்.

சுகாதாரம்:
தினமும் பல்லாயிரக்கணக்கான புதியவர்கள் வந்து தங்குவதும், செல்வதுமான திருப்பூரின் பிரத்யேக தன்மையை கணக்கிலெடுக்க வேண்டும். சிறு, சிறு பனியன் தொழிலகங்கள் கூடுதலாக இருப்பதால் சுகாதாரப் பணிகளில் கூடுதலானவர்களை அமர்த்த வேண்டும். ஆனால், தற்பொது சுகாதாரத் தொழிலாளர்களின் விகிதம் 6 ஆயிரம் பேருக்கு 1 நிரந்தரத் தொழிலாளி, 1 சுய உதவிக் குழுத் தொழிலாளி என்று அமைந்துள்ளது. இதில் சுய உதவிக் குழுவின் பெயரில் முறைகேடுகளுக்கு வாய்ப்பிருப்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே, ஆயிரம் பேருக்கு ஒரு சுகாதாரத் தொழிலாளி என்ற அளவில், நிரந்தரத் தொழிலாளர்களை நியமிப்பது அவசியமாகும்.

மோசமான மின் பாதைகள்:
பல ஆண்டுகளுக்கு முன் பதிக்கப்பட்ட மின் கம்பங்களும், கம்பிகளும் பழுதடைந்திருக்கின்றன. பல இடங்களில் அறுந்து விழுகும் அளவில் மின்கம்பிகளும், சிதிலமடைந்த மின் கம்பங்களும் இருக்கின்றன. மோசமான மின் பாதைகளால் சிறு தொழிலகங்கள் பாதிக்கப்படுகின்றன. மின் விரயம் அதிகரிக்கிறது. மின்விபத்துக்கள் ஏற்பட்டு, விலை உயர்ந்த மின் உபகரணங்கள் பாதிக்கப்படுவதையும் பார்க்க முடிகிறது. மின் வாரியத்தை நவீனப்படுத்துவது, ஒட்டுமொத்த மாநிலத்தின் அவசியமாக இருந்தபோதிலும், கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள தடங்களை உடனடியாக சரி செய்திட வேண்டும்.

மாநகரைக் கட்டமைத்தல்:
மாநகராட்சியை அதற்குரிய பொலிவோடு செயல்படுத்த மத்திய அரசின் ‘ஜவஹர்லால் நேரு நகர்ப்புற புனரமைப்பு திட்டத்தை’ அமலாக்கினாலே சாத்தியமாகும். அத்திட்டத்தில் நிதி ஒதுக்கீட்டை பெறும் முயற்சிகளை வேகப்படுத்த வேண்டும். திருப்பூர் மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டபோது, 15 வேலம்பாளையம், நல்லூர் ஆகிய 2 நகராட்சிகளும், செட்டிபாளையம், நெருப்பெரிச்சல், தொட்டிபாளையம், மண்ணரை, முருகம்பாளையம், ஆண்டிபாளையம், வீரபாண்டி, முத்தணம்பாளையம் ஆகிய 8 ஊராட்சிகளும் இணைக்கப்பட்டன. மூன்றாம் நிலை நகராட்சியாக அப்போதுதான் தரம் உயர்த்தப்பட்டிருந்த பகுதிகளும், ஊராட்சிகளும் அடிப்படை வசதிகளில் பெருமளவு பின் தங்கியுள்ளன. சுகாதாரம் பேணுவதிலும், குடிநீர் விநியோகத்திலும் அப்பகுதிகளுக்கு கூடுதல் முக்கியத்துவம் தர வேண்டும். பாதாள சாக்கடை, முறையான சாலைகள் ஏற்படுத்தவும் வேண்டும். இந்த ஏற்றதாழ்வான நிலையை மாற்றிட மாநகராட்சியின் வரி வருமானம் மட்டும் போதாது. எனவே, சிறப்பு நிதி ஒதுக்கீடு பெற முயற்சிப்பதும், மாநகராட்சியின் வரவு செலவுத் திட்டத்தில், புதிதாக சேர்க்கப்பட்ட பகுதிகளுக்கு முன்னுரிமையளிப்பதும் வேண்டும்.அதேபோல, திடக்கழிவுகளை பாறைக் குழிகளிலும், பயன்படாத நீர்த்தேக்கங்களிலும் கொட்டுவதென்ற நடைமுறையால், அதைச் சுற்றி வசிக்கும் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கின்றனர். இந்த நடைமுறையை மாற்றி நவீன முறையில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயலாக்க வேண்டும்.இவை தவிர திறன் வாய்ந்த தொழிலாளர்கள் அதிகத் தேவையுள்ள திருப்பூரில் தொழில் சார்ந்த பயிற்சி நிலையங்கள், அரசு பொறியியல் கல்லூரி, ஆயத்த ஆடை ஆராய்ச்சி அமைப்பு, தொழில் சார்ந்த நோய்களுக்கான சிறப்பு மருத்துவ வசதிகள் என பிரத்யேக கட்டமைப்புகளை ஏற்படுத்தும்போதுதான், திருப்பூர் மக்களின் வாழ்க்கைத் தரம் உயரும். வரப்புயர நீர் உயரும், நீர் உயர நெல் உயரும் ...

0 கருத்துகள்:

Post a Comment

பிரபல பதிவுகள்

அகழ்வாய்வு (1) அடிப்படை வசதிகள் (5) அரசியல் (14) அரசு பள்ளி (2) அரசு மருத்துவமனை (3) ஆண்டு விழா (1) ஆறுகள் (1) உள்கட்டமைப்பு (2) உள்ளாட்சித் துறை (1) ஏற்றுமதியாளர் சங்கம் (1) ஓமியோபதி மருந்து (1) கடிதம் (3) கட்டுரை (1) கல்வி (3) கவன ஈர்ப்பு தீர்மானம் (1) கழிப்பிடம் (1) கழிவுகள் (1) குடிநீர் (4) குடிநீர் கட்டணம் (1) குடிமனைப்பட்டா (1) குழாய் உடைப்பு (1) கூட்டுறவு தேர்தல்கள் (1) கே.தங்கவேல் MLA (37) கொங்கு மண்டலம் (1) சட்டமன்ற உரை (18) சட்டமன்ற கேள்விகள் (8) சாக்கடை (2) சாதி அரசியல் (1) சாயக் கழிவு (2) சாஸ்த்ரா பாக்டீரியா (1) சிப்காட் (1) சிற்பக் கலை (1) சுகாதாரம் (3) சுங்கவரி (1) சுரங்கப்பாதை. (1) செக்யூரிட்டி தொழிலாளர் (1) செய்தி (6) செய்திகள் (25) செவிலியர் (1) சேதுக்கால்வாய் (1) டெங்கு காய்ச்சல் (1) டெட்ராய்ட் (1) தனியார்மயம் (2) தாது மணல் கொள்ளை (1) தால்சீமியா (1) திருப்பூர் (3) திருப்பூர் கோரிக்கைகள் (1) திருப்பூர் தெற்கு தொகுதி (3) திருப்பூர் மாநகராட்சி (1) துப்புரவு தொழிலாளர் (1) துறைமுகங்கள் (1) தென் மாநிலம் (1) தொழிலாளர் (9) தொழில் (8) தொழில்துறை (1) நிகழ்வு (1) நிகழ்வுகள் (17) நிதி (1) நெடுஞ்சாலைகள் (3) நேரடி ஆய்வு (5) நொய்யலாறு (2) பத்திரப்பதிவு (2) பிரசுரம் (11) பேட்டி (2) பொது முதலீடுகள் (1) பொதுப்பணித்துறை (1) போக்குவரத்து (1) மக்கள் கோரிக்கை (7) மக்கள் கோரிக்கை மாநாடு (3) மக்கள் சந்திப்பு (9) மத்திய பட்ஜெட் (1) மருத்துவமனை (1) மருத்துவம் (1) மாசுபடுதல்.குடிநீர். (1) மாநகராட்சி (2) மாவட்ட ஆட்சியர் (1) மின்சாரம் (1) மின்வெட்டு (4) மெட்ரோ ரயில் (1) மேம்பாலம் (1) ரயில்வே (1) ரயில்வே கேட் (1) ரேசன் அட்டை (1) வணிகவரி (1) வருவாய்த்துறை (1) வாக்குறுதிகள் (1) வாழ்த்துரை (2) வியாபாரிகள் (1) விவசாயம் (4) வெள்ளம் (1)