Thursday 9 January 2014

கொங்கு அரசியல் எழுச்சி திசைவழி என்ன? - கே.தங்கவேல் எம்எல்ஏ

தமிழ்நாட்டின் மேற்குப் பகுதியான கொங்கு மண்டலத்தில் அண்மைக் காலமாக, குறிப்பிட்ட அடையாளத்தை மையப்படுத்தி எடுக்கப்படும் அரசியல் நடவடிக்கைகள் நம் கவனத்தை பெற்று வருகின்றன. குறிப்பாக கடந்த 2009 ஆம் ஆண்டு பிப்ரவரி 15ம் தேதி கருமத்தம்பட்டியில் ஒரு மாநாட்டை நடத்தி, கொங்குநாடு முன்னேற்றக் கழகம் (கே.எம்.கே.) என்ற அரசியல் கட்சி தொடங்கப்பட்டது. இந்த நான்கு ஆண்டுகளுக்குள் அந்தக் கட்சி உடைந்துவிட்டது. சுமார் ஒன்பது மாதங்களுக்கு முன்பு அதில் இருந்த, ஈ.ஆர்.ஈஸ்வரன் தலைமையிலான ஒரு பிரிவினர், கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி என்று கட்சிப் பெயரை மாற்றி வைத்துக் கொண்டனர். கடந்த டிசம்பர் 29 ஆம் தேதி பெருமாநல்லூரில் ‘அரசியல் எழுச்சி மாநாடு’ ஒன்றை நடத்தியுள்ளனர். இந்த கட்சியைப் பற்றியும், இவர்களது மாநாடு குறித்தும் நாம் விவாதிக்க வேண்டியுள்ளது.

தமிழகத்தின் பிற பகுதிகளை ஒப்பிடும் போது, பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக கொங்கு மண்டலம் இருக்கும் நிலையில், “பிராந்திய அடிப்படையிலான அரசி யலே” இப்பகுதியின் மேம்பாட்டுக்கு வழி வகுக்கும் என்பது அவர்களின் முக்கிய முழக்கமாக உள்ளது. இருப்பினும் இந்தக் கட்சி யின் பின்புலத்தில் குறிப்பிட்ட சாதிய அணி திரட்டல் நடந்துவருவதைக் கவனிக்க வேண்டும்.இந்த முழக்கத்தின் அடிப்படையில் 1) கொங்குநாடு முன்னேற்றக் கழகம் 2) கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி 3) கொங்குவேளாளக் கவுண்டர்கள் பேரவை 4) கொங்குஇளைஞர் பேரவை 5) தீரன் சின்னமலை பேரவை என தனித்தனியாக தங்கள்செயல்பாடுகளை அமைத்துக் கொண்டுள் ளனர். நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் சூழலில், இந்த அரசியல் நடவடிக்கைகள் இப்பகுதியின் வளர்ச்சிக்கு உதவியாக இருக்குமா? அல்லது பின்னடைவுக்கு வழி வகுக்குமா? என்ற கேள்வியை எழுப்புவது அவசியம்.

தீர்வுகள் கிடைக்குமா?
கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி நடத்திய அரசியல் எழுச்சி மாநாட்டில் சுமார் 50 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அவற்றில் விவசாயிகளின் பிரச்சனைகள் பிரதானமாக உள்ளன. விளைபொருட்களுக்கு விலை நிர்ணயம், குளங்களை தூர்வாருதல், பாசன வசதிகள் மேம்படுத்துதல், தடையற்ற மின்சாரம், வறட்சி நிவாரணம், உர மானியம், விவசாயிகளுக்கு ஓய்வூதியம், மானியக் கடன் மற்றும் கடன் தள்ளுபடி உள்ளிட்டவையும்; தொழில் துறை, விசைத்தறியைப் பாதுகாக்க தடையில்லாத மின்சாரம், தொழிற்கடன் மற்றும் உட்கட்டமைப்பு மேம்படுத்துதல், ரயில்வே மேம்பாலப் பணிகளை துரிதமாக முடித்தல், கெயில் பைப் லைன் திட்டத்தை மாற்று வழியில் செயலாக்குதல் போன்ற தீர்மானங்களை குறிப்பிட்டுச் சொல்லலாம்.

ஆனால், மேற்கண்ட பிரச்சனைகளில் பெரும்பான்மையானவை ஏதோ கொங்கு மண்டலத்தில் மட்டும் உள்ளவை அல்ல, நாடு முழுவதும் உள்ள பொதுவான பிரச் சனைகளாகும். கடந்த 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற மாநாட்டிலும் இதே போன்றத் தீர்மானங்களை நிறைவேற்றிவிட்டு, இடைப்பட்ட காலத்தில் அவற்றை வெல்ல எந்தநடவடிக்கையையும் அவர்கள் மேற்கொள்ள வில்லை. உண்மையில், இக்கோரிக்கைகளை வென்றெடுக்க நாடு தழுவிய அளவில் அனைத்துப் பகுதி விவசாயிகளும் எந்தவொரு சாதி, மத வித்தியாசமும் இல்லாமல் விரிவாக ஒன்றுபட்டுப் போராட்டம் நடத்த வேண்டிய அவசியம் உள்ளது. மத்திய அரசையும், மாநிலஅரசுகளையும் வலுவாக நிர்ப்பந்தம் செய்தால் தான் வென்றெடுக்க முடியும். ஆனால் இந்தகட்சியின் பெயரில் ‘தேசியம்’ என்ற வார்த் தையை வைத்துக்கொண்டு, பிராந்திய உணர்வுகளைத் தூண்டிவிட்டு சாதி ரீதியாக அணி திரட்டுவது விவசாயிகளைத் தவறான வழி யில் திசை திருப்புவதுடன், விவ சாயிகளின் ஒற்றுமையைச் சிதைப்பதாகவே அமையும்.3 ஆயிரத்திற்கும் அதிகமான சாதிகளும், 90 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உட்பிரிவுகளும், 1500க்கும் அதிகமான மொழிவழி, பிராந்திய இனக்குழுக்களையும் கொண்ட நாடு இந்தியா. இங்குள்ள ஒவ்வொரு சாதியும், இனமும் மற்றவர்களுக்கு எதிராக சிந்திக்கும் போக்கு, நம் நாட்டின் ஒற்றுமைக்கும், மக்கள் ஒற்றுமைக்கும் எதிராகப் போவதுடன், ஜனநாயக விரோத, பிளவுவாத, பிரிவினைவாத, குறுகிய அரசியல் நடத்தக்கூடியவர்களுக்கே சாதகமாகப் போகும். நம் மக்கள் வாழ்வின் முன்னேற்றத்துக்கு உதவாது என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.

யாருக்கு எதிராக?
60 வயதுக்கு மேற்பட்ட விவசாயிகளுக்கு ஓய்வூதியம் கேட்டிருக்கும் தீர்மானங்களில், ‘விவசாயத் தொழிலாளர்’ ஓய்வூதியமோ, பிற பிரச்சனைகளோ வலியுறுத்தப்படவில்லை. ஒரு தீர்மானம் தவிர நெசவாளர்கள் பிரச்சனைகளும் இல்லை. மேலும் தீர்மானங்களையும், நிர்வாகிகளின் பேச்சுக்களையும் கவனித்தால் தலித், பழங்குடியினருக்கு, சாதியக்கொடுமைகளில் இருந்து பாது காப்பளிக்கும் பிசிஆர் சட்டம் திருத்தப்பட வேண்டும் என்பது முக்கிய இடம் பெற்றுள்ளது. இது குறித்துமாநாட்டில் பேசியவர்கள், ‘விசைத்தறி தொழிலாளர்கள் அட்வான்ஸ் வாங்கிவிட்டுதிருப்பி கேட்டால் பி.சி.ஆர். வழக்குக் கொடுக்கிறார்கள்.’

‘முன் பெல்லாம் சாதியைச் சொல்லிதிட்டினார் என்று காவல்துறை யினர் பிசிஆர் வழக்கு போடுவார்கள். இப்போது நமது இளைஞர்கள் உடனடியாக சம்பவ இடத்துக்குச் சென்று உண்மையை விசாரித்து வழக்கு போடச் சொல்லி களம் இறங்குகின்றனர்.’ ‘பொறுக்கிகள், தெள்ளவாரிகள் காவல்நிலையத்தில் பொய்ப் புகார் கொடுத்து பி.சி.ஆர் வழக்கு போடுகின்றனர். எனவே அந்த சட்டத்தை மாற்ற வேண்டும் இல்லாவிட்டால் கொங்கு மக்கள் சட்டத்தை கையிலெடுப்போம்’ என் றெல்லாம் பேசியுள்ளனர்.

இந்தியாவில் தலித் மக்கள் அதிகம் வசிக்கும் மாநிலங்களின் வரிசையில் தமிழ் நாடு 5வது இடத்தில் உள்ளது. தமிழக மக்கள் தொகையில் தலித் மக்கள் 21 சத வீதம் உள்ளனர். இங்கு, வன்கொடுமைச் சட்டம் முறையாக அமலாகவில்லை என்பது தான் உண்மையான நிலைமையாகும். 2002ஆம் ஆண்டு முதல் 2011 வரை யிலான பத்தாண்டுகளில் 11 ஆயிரத்து 629 வன்கொடுமை வழக்குகள் பதியப்பட் டுள்ளன. இதன் பொருள் தமிழகத்தில் உள்ள 12 ஆயிரத்து 620 ஊராட்சிகளில், ஊராட்சிக்கு ஒரு வழக்கு கூட பதிவாக வில்லை என்பதாகும். பதிவான வழக்கு களிலும், 406 வழக்குகளில் மட்டுமே தண்டனை பெறப்பட்டுள்ளது. அதாவது நூற்றுக்கு 3 வழக்குகளில் மட்டுமே தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 97 சத விகித வழக்குகளின் நிலைமை அதோகதிதான்! மேலும் திருப்பூர் மாவட்டத் தில் வன்கொடுமைகளால் பாதிக்கப் பட்டவர்களுக்கான இழப்பீடு ரூ.23 லட் சம் ஒதுக்கப்பட்டதில், ரூ.13லட்சம்தான் வழங் கப்பட்டுள்ளது. ரூ.10லட்சம் வழங்கப்படாமல் உள்ளது என்பது காவல்துறை இப்பிரச் சனையில் எவ்வாறு அணுகுகிறது என் பதையே காட்டுகிறது. உண்மை இவ்வாறு இருக்க, வன் கொடு மை தடுப்பு பி.சி.ஆர். சட்டம் எந்த அளவில் செயல்படுகிறது என்பதை பார்க்கும்போது, யார் வன்முறையைத் தூண்டுகிறார்கள் என்பதும், அதன் குறுகிய நோக்கம் என்ன என்பதும் தெளிவாகிறது.

பெண்களுக்கு எதிராக
மேலும், கொமதேக பொதுச் செயலாளர் ஈஸ்வரன், தனது பேச்சில் ‘பெண்ணுரிமை இல்லை என்று யாராவது பேசினால் அது நியாயமாகுமா?’ என்று கேட்கிறார். ஆனால், அவருக்கு முன் அதே மேடையில் பேசிய நிர்வாகி ஒருவர் பேசியதைக் கவனி யுங்கள்: ‘பெண்களை கம்ப்யூட்டர் படிக்க அனுப்பினால், அவர்கள் இ-மெயில், பேஸ்புக் என கற்றுக் கொண்டு தவறு செய்யக்கூடியவர்களாக மாற்றப்படுகிறார்கள். எனவே, பெண் பிள்ளைகளை கம்ப்யூட்டர் படிக்க அனுப்பக் கூடாது. கம்ப்யூட்டர் படித்தபெண்களை திருமணம் செய்யக் கூடாது.’ என்கிறார். இந்தப் பேச்சுக்கு வரவேற்பும், கை தட்டலும் கிடைத்ததைக் காண முடிந்தது. இது பெண்களின் வேலை வாய்ப்பு, பெண்ணுரிமை, பெண் சமத்துவம், சுயமரியாதை ஆகியவற்றைப் பாதிக்கும் போக் காகும்.

தனிமைப்படுத்தும்
ஒரு பக்கம் கொங்கு நாட்டின் ஒன்று பட்ட வளர்ச்சி, முன்னேற்றம் என்று பேசிக் கொண்டே, சாதிய வாக்கு வங்கியை உரு வாக்குவதே இக்கட்சியின் நோக்கமாக உள் ளது. “நாடாளுமன்றத் தேர்தலில் முடிவுகளை மாற்றக் கூடியதாக கொமதேக இருக்கும், 2009 ஆம் ஆண்டில் நம்மோடு (அப்போது கொமுக) யார் கூட்டணி வைத்திருந்தாலும், அதுதான் வெற்றிக் கூட்டணியாக இருந்திருக்கும்.” என அவர்கள் பேசுகின்றனர்.

உண்மையில் கடந்த 2009 ஆம் ஆண்டில் 12 நாடாளுமன்றத் தொகுதிகளில் தனித்துக் களம் கண்ட கொங்குநாடு முன்னேற்றக் கழகம் ஒரு இடம் கூடப் பெறவில்லை.அதன் பின்னர், மாநிலத்தில் ஆளும் கட்சி யாக இருந்த திமுக தலைமையில், மத்தியில் ஆளும் கட்சியாக இருந்த காங்கிரஸ், பாமக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியோடு, கொங்கு நாடு முன்னேற்றக் கழகம் (பிரியாத போது) கூட்டணி அமைத்து 2011 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டனர். அந்தத் தேர்தலில், கொ.மு.க. ஒரு சீட்டுக்கூட ஜெயிக்க முடியாமல் படுதோல்வியடைந்தது.

இவற்றையெல்லாம் ஈஸ்வரன் வசதியாக மறந்துவிட்டுப் பேசுகிறார். கொங்கு பகுதியில், சாதி அடிப்படையில் வாக்கு வங்கியை உருவாக்கும் முயற்சி கொங்கு வேளாளர்களைப் பொது நீரோட்டத்திலிருந்து விலக்குவதாகவே அமையும் என்பதையே அனுபவம் காட்டுகிறது.சாதி, பிராந்திய அடிப்படையிலான அணி திரட்டல்கள் மெய்யான பிரச்சனைகளில் இருந்து மக்களை திசை திருப்புகின்றன. இன்று நம் நாடு சந்திக்கும் முக்கியமான பிரச்சனைகளான விவசாய நெருக்கடி, சிறு, குறுந்தொழில் நெருக்கடியிலிருந்து மீள, அவசியமான மக்கள் ஒற்றுமையைச் சிதைக்கின்றன. 

ஆபத்தான அரசியல்
மேற்கண்ட இவர்களது அரசியல், அப்பட்டமான தேர்தல் சந்தர்ப்பவாதம் என்பது ஒருபுறம் இருக்க, அவர்கள் நிறை வேற்றியுள்ள தீர்மானங்களிலோ, மாநாட்டுப் பேச்சுகளிலோ, இன்றைய சூழலில் இந்தியா விற்கு பெரும் அச்சுறுத்தலாக எழுந்திருக்கும் மதவாதத்திற்கு எதிராக அவர்கள் எதுவும் பேசவில்லை என்பதையும் கவனித்தால், இப்படிப்பட்ட திசை திருப்பல்கள் யாருக்கு வழி அமைத்துக் கொடுக்கின்றன என்பதும் தெளிவாகப் புரியும்.கடந்த இரண்டு தேர்தல்களில், கொங்கு மண்டல மக்கள் இத்தகைய முழக்கங்களை நிராகரித்துள்ளனர். அதனை உணர்ந்து, உண்மையான தீர்வுகளை நோக்கி விவசாயி களும், தொழிலாளர்களும், சிறுதொழில் முனைவோரும் ஒன்றுபடுவதே இப்போதைய அவசியமாகும்.
 (நன்றி தீக்கதிர் - 10.01.2014)

1 கருத்துகள்:

Anonymous said...

மிகவும் அருமையான பதிவு அய்யா. ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தில் பல்லின சாதி சமய மக்கள் ஒருங்கிணைந்து வாழும் போது, அப் பிரதேசத்தை ஒரு குறிப்பிட்ட சாதி, சமய மக்கள் மட்டும் தமக்குரியன என்ற அடையாள அரசியலை முன்னகர்த்தி செயல்படுவது ஆபத்தான ஒரு செயலாகும். இதனால் அக் குறிப்பிட்ட பிரதேசத்தில் வாழும் பிற மக்கள் ஒடுக்கப்பட்டும், புறக்கணிக்கப்படும் நிலை ஏற்படும், கொங்கு மண்டலம் என்னும் போது வேளாள கவுண்டர்கள் மட்டுமில்லை தலித்கள், முஸ்லிம்கள், பழங்குடிகள், படுகர்கள் என பல மக்கள் வாழ்கின்றார்கள். அப் பிரதேசம் அரசியல் காரணங்களால் வளர்ச்சியடையாமலோ, இயற்கை சீர்கேட்டை எதிர்க்கொள்ளும் போதோ, அனைத்து மக்களும் ஒன்றிணைந்தே போராட வேண்டும். ஆனால் இத்தகைய சாதி சங்கங்கள் வெளிப்புறத்தில் பொது சமூக கண்ணோட்டம் கொள்வது போல காட்சி தந்தாலும் உள்ளர்த்ததில் சாதி ஏகாதிபத்தியமே குறிக்கோளாய் இருக்கின்றது. விவசாயிகள், தொழிலாளர்கள் என நடுத்தர ஏழை வர்க்கங்கள் வர்க்க வகையில் மட்டுமே ஒன்றிணைந்து போராடுவதே சிறப்பானது.

தங்கள் வலைதளம் நன்றாக உள்ளது. தொடர்ந்து வாசிக்கின்றேன். நன்றிகள்.

--- விவரணம். ---

Post a Comment

பிரபல பதிவுகள்

அகழ்வாய்வு (1) அடிப்படை வசதிகள் (5) அரசியல் (14) அரசு பள்ளி (2) அரசு மருத்துவமனை (3) ஆண்டு விழா (1) ஆறுகள் (1) உள்கட்டமைப்பு (2) உள்ளாட்சித் துறை (1) ஏற்றுமதியாளர் சங்கம் (1) ஓமியோபதி மருந்து (1) கடிதம் (3) கட்டுரை (1) கல்வி (3) கவன ஈர்ப்பு தீர்மானம் (1) கழிப்பிடம் (1) கழிவுகள் (1) குடிநீர் (4) குடிநீர் கட்டணம் (1) குடிமனைப்பட்டா (1) குழாய் உடைப்பு (1) கூட்டுறவு தேர்தல்கள் (1) கே.தங்கவேல் MLA (37) கொங்கு மண்டலம் (1) சட்டமன்ற உரை (18) சட்டமன்ற கேள்விகள் (8) சாக்கடை (2) சாதி அரசியல் (1) சாயக் கழிவு (2) சாஸ்த்ரா பாக்டீரியா (1) சிப்காட் (1) சிற்பக் கலை (1) சுகாதாரம் (3) சுங்கவரி (1) சுரங்கப்பாதை. (1) செக்யூரிட்டி தொழிலாளர் (1) செய்தி (6) செய்திகள் (25) செவிலியர் (1) சேதுக்கால்வாய் (1) டெங்கு காய்ச்சல் (1) டெட்ராய்ட் (1) தனியார்மயம் (2) தாது மணல் கொள்ளை (1) தால்சீமியா (1) திருப்பூர் (3) திருப்பூர் கோரிக்கைகள் (1) திருப்பூர் தெற்கு தொகுதி (3) திருப்பூர் மாநகராட்சி (1) துப்புரவு தொழிலாளர் (1) துறைமுகங்கள் (1) தென் மாநிலம் (1) தொழிலாளர் (9) தொழில் (8) தொழில்துறை (1) நிகழ்வு (1) நிகழ்வுகள் (17) நிதி (1) நெடுஞ்சாலைகள் (3) நேரடி ஆய்வு (5) நொய்யலாறு (2) பத்திரப்பதிவு (2) பிரசுரம் (11) பேட்டி (2) பொது முதலீடுகள் (1) பொதுப்பணித்துறை (1) போக்குவரத்து (1) மக்கள் கோரிக்கை (7) மக்கள் கோரிக்கை மாநாடு (3) மக்கள் சந்திப்பு (9) மத்திய பட்ஜெட் (1) மருத்துவமனை (1) மருத்துவம் (1) மாசுபடுதல்.குடிநீர். (1) மாநகராட்சி (2) மாவட்ட ஆட்சியர் (1) மின்சாரம் (1) மின்வெட்டு (4) மெட்ரோ ரயில் (1) மேம்பாலம் (1) ரயில்வே (1) ரயில்வே கேட் (1) ரேசன் அட்டை (1) வணிகவரி (1) வருவாய்த்துறை (1) வாக்குறுதிகள் (1) வாழ்த்துரை (2) வியாபாரிகள் (1) விவசாயம் (4) வெள்ளம் (1)