Friday 1 August 2014

உள்ளாட்சித் துறை - சட்டமன்ற விவாதம் : (முழுமை)

சட்டப்பேரவையில் வெள்ளியன்று (ஆக.1) நகராட்சி நிர்வாகங்கள், குடிநீர் வழங்கல், ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறைக0ளின் மானியக் கோரிக்கை மீது நடைபெற்ற விவாதத்தில் அவர் பேசியதும், அமைச்சர் பதிலும் வருமாறு:

கே. தங்கவேல்: இந்தியாவிலேயே அதிகமாக நகர்மயமாகும் மாநிலங்களில் தமிழகமும் உள்ளது. நகர்மயம் வளர்ச்சியின் குறியீடாகப் பார்க்கப்பட்டாலும், வாய்ப்புகள் தேடி பல்லாயிரக்கணக்கில் மக்கள் இடம்பெயர்வதையும் அது உள்ளடக்கியுள்ளது. நகர்மயமாகும் பகுதிகளில் ஏழை உழைப்பாளர்கள் நெருக்கடியான வாழ்விடங்களில் வாழ நேர்வதைப் பார்க்கிறோம். வேகமான வளர்ச்சி அனைவருக்குமானதாக இல்லை என்பதே இதன் அடிப்படையாகும்.

புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள திருப்பூர், திண்டுக்கல், தஞ்சை, ஈரோடு, வேலூர், தூத்துக்குடி உள்ளிட்ட மாநகராட்சிகளில் உள்கட்டமைப்பு வசதிகள் போதுமானதாக இல்லை. நகராட்சிகள், பேரூராட்சிகள் ஊராட்சிகளாக இருந்து நேரடியாக மாநகராட்சி இணைப்பு பெற்றுள்ள பகுதிகளில் மக்களுக்கு வரிச்சுமை அதிகரிக்கிறது. வசதிகள் கூடவில்லை. அரசு புதிய மாநகராட்சிகளுக்கென சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்து - அவற்றின் கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும்.

உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி: அதிமுக ஆட்சியில் வரி போடவில்லை. சென்னை மாநகராட்சியில் கூட புதிதாக 42 பகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. அந்தந்த பகுதிகளுக்கு தேவைப்படும் வடிகால் வசதி, குடிநீர்,சாலை வசதி செய்து தரப்பட்டு வருகின்றன.

கே.தங்கவேல்: அம்மா உணவகம் திட்டத்தை அரசு செயலாக்குவது வரவேற்புக்கு உரியது. இந்த திட்டத்திற்கு மாநகராட்சி பொது நிதியைப் பயன்படுத்துவதால் நிதிச்சுமை அதிகரிக்கிறது. அதிகாரிகள், ஊழியர்களின் பணிச்சுமையும் கூடுகிறது. எனவே, இத்திட்டத்திற்கென தனியாக நிதி ஒதுக்கி, பணியாளர் நியமித்து செயல்படுத்த வேண்டும். 

சென்னை போன் ற இடங்களில் அம்மா உணவகம் பள்ளி இடத்தில் அமைத்துள்ளனர். பள்ளிகளுக்கே அந்த இடம் போதுமானதாக இல்லை. எனவே இவ்வாறு உணவகங்கள் அமைப்பதை தவிர்க்கவேண்டும்.

கோவை போன்ற மாநகராட்சிகளிலேயே நிதி இல்லாமல் திட்டங்கள் தாமதமாகின்றன. உதாரணமாக கோவை மாநகரின் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க 5 இடங்களில் மேம்பாலம் அவசியமாகிறது. இதற்கான தீர்மானம் 23.01.2013 அன்றே நிறைவேற்றப்பட்டுவிட்டது. மாநில அரசின் வழிகாட்டுதலின்றி, இத்திட்டம் செயலுக்கு வராமல் இருக்கிறது.

அமைச்சர் எஸ்.பி.வேலுமணி: கடந்த திமுக ஆட்சியில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு எந்த நிதியும் வழங்கப்படவில்லை. ஜவஹர்லால் நேரு நகர்புற வளர்ச்சித் திட்டத்தின் கீழ் மத்திய அரசு அளித்த நிதிதான் மாநகராட்சிகளுக்கு கிடைத்தன. ஆனால் அதிமுக அரசுவந்த பின்னர் நகர்புற ஒருங்கிணைந்த கட்டமைப்பு நிதியை உருவாக்கி ஒவ்வொரு நகராட்சிக்கும் 125 பேரூராட்சிகளுக்கும் ஒருங்கிணைந்த கட்டமைப்பு நிதியை அறிவித்து போதுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. கோவை மாநகராட்சிக்கு என்னென்ன திட்டங்கள் தேவையோ அதை மாநில அரசு நிறைவேற்றி வருகிறது.

கே.தங்கவேல்: திருப்பூரில் வெள்ளத்தால் பழுதான பாலங்களை இன்று வரை கட்டப்படாமல், தற்காலிக பாலங்களில் மக்கள் ஆபத்தான நிலையில் பயணம் செய்கின்றனர்.

நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எடப்படி பழனிச்சாமி: எந்தப் பாலம் ஆபத்தானதாக உள்ளது என்பதை உறுப்பினர் தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.

கே.தங்கவேல்: ஏற்கனவே சட்டமன்றத்தில் இதை கூறியிருக்கிறேன். திருப்பூர் மாநகராட்சியில் உள்ள பாலம் மிகவும் பழுதடைந்துள்ளது. நான் பொதுப்பணித்துறை பாலத்தை குறிப்பிடவில்லை. மாநகராட்சியில் உள்ள ஜம்மனை பாலத்தைதான்குறிப்பிடுகிறேன்.

அமைச்சர் எஸ்.பி.வேலுமணி: உறுப்பினர் தெரிவிக்கும் பாலம் மிகமோசமாக இருந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

கே.தங்கவேல்: மத்திய அரசின் நிதிக்காக மாநில அரசு போராடுவதை நாம் அறிவோம். ஆனால், மத்திய அரசு கடந்த 9 ஆண்டுகளாக 35 லட்சம் கோடி ரூபாய் வரித் தொகையை பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் வசூலிக்காமல் விட்டிருக்கிறது. காங்கிரசின் பாதையிலேயே பயணிக்கும் பாஜகவும் இந்த ஆண்டு ரூ.5 லட்சத்து 35 ஆயிரம் கோடிகள் சலுகையாக கொடுத்திருக்கிறது. மொத்த சலுகைத் தொகையை வசூல் செய்திருந்தால், அதில் 30 சதவீதம் அதாவது சுமார் 10 லட்சம் கோடி ரூபாய் மாநில அரசுகளுக்கு கிடைத்திருக்கும். இதில் தமிழகத்திற்கும் கணிசமான நிதி கிடைத்திருக்கும். உள்ளாட்சி நிர்வாகங்கள் சவலைக் குழந்தைகளாக இருக்கும்போது, தனியார் நிறுவனங்களுக்கு சலுகைகளை அள்ளிக் கொடுப்பதே, மத்திய அரசின் போக்காக இருக்கிறது.ஒவ்வொரு பகுதியிலும் மக்கள் பிரச்சனைகள் வேறுபடுகின்றன.

எனவே, சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியை அதற்கேற்ற வகையில் செலவிட வரையறைகளை மாற்றியமைக்க வேண்டும். நிதி ஒதுக்கீட்டுக்குப் பின்னும், ஒப்பந்த நிலையில் பணிகள் தாமதமாகின்றன. இத்திட்டத்தில் முதல் 2 ஆண்டுகளில் எடுக்கப்பட்டவற்றில் 6 ஆயிரத்து 596 பணிகள் முடிந்துள்ளன, ஆனால் 8 ஆயிரத்து 825 பணிகள் இன்னும் நடந்துவருகின்றன. அதற்கான காரணங்களைக் களைந்து, பணிகளை துரிதப்படுத்த வேண்டும்.

அமைச்சர் எஸ்.பி.வேலுமணி: சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் மேற்கொள்ளப்படும் பணிகளை மாவட்ட ஆட்சியர் மூலமாக உடனுக்குடன் ஆய்வு செய்யப்படுகிறது. சில இடங்களில் இடப்பிரச்சனை உள்ளது.

கே.தங்கவேல்: ஆனால் 8 ஆயிரத்தி 825 பணிகள் இன்னும் துவங்கப்படவே இல்லை. நடந்துள்ள பணிகளை விட நடக்காத பணிகள்தான் அதிகமாக உள்ளன. பல காரணங்களால் இந்தப்பணிகள் தாமதமாகின்றன. இதனால் ஒப்பந்தகாரர்கள் பணிகளை எடுக்கவே தயங்குகிறார்கள். ஒப்பந்தக்காரர்கள் வராத காரணத்தால் பல பணிகள் இன்னும் துவங்கப்படாமல் உள்ளது. எனவே அந்தப்பணிகளையும் விரைந்துமுடிக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

அமைச்சர் வேலுமணி: நடக்காத பணிகளுக்கு மறு ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டுள்ளன. 12 மாநகராட்சிகளிலும் இதுபோன்ற சூழ்நிலை இருப்பது உண்மைதான். அந்தப்பணிகளை துரிதப்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளது.

கே. தங்கவேல்: 528 பேரூராட்சிகளில் தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்றிவந்த 2923 பேர்களில் 600 பேருக்கு நீதிமன்ற உத்தரவு பெற்றதன் மூலம் முன்தேதியிட்டு பணப்பலன் கிடைத்துள்ளது. மீதமுள்ளோருக்கும் அதனை அரசு வழங்கிட வேண்டும். பேரூராட்சிகளில் அரசு நிலையாக்கப்பட்ட பணிகளில் கருணை அடிப்படையில் பணி வழங்கும்போது வாரிசுகளின் கல்வித்தகுதி கணக்கில் எடுக்கப்படுவதில்லை. இது சமூக நீதிக்கு எதிரானதாகும். அரசாணை நிலை எண் 206 (தேதி 1.1.1995) திருத்தம் செய்து, கல்வித் தகுதிக்கு ஏற்ப அமைச்சுப் பணி வழங்க வேண்டும். விதிகளுக்கு உட்பட்டு அரூர் பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்தவேண்டும்.

அமைச்சர் வேலுமணி: பணியாளர்கள் நிபந்தனைகளுக்கு உட்பட்டுத்தான் நியமிக்கப்படுகிறார்கள். பேரூராட்சி நகராட்சிக்கு வருவாய் அளவு ஒன்று உள்ளது. அதற்கு ஏற்பத்தான் ஊழியர்கள் நியமிக்கப்படுகிறார்கள். ஆனால் ஊழியர்கள் பற்றாக்குறை என்பதால் எங்கும்பணிகள் நின்றுவிடவில்லை. சட்டத்திற்கு உட்பட்டு பணியாளர்கள் நியமிக்கப்படுகிறார்கள்.

கே.தங்கவேல்: ஊராட்சி செயலாளர்களுக்கு இளநிலை உதவியாளருக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். அவர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்க வேண்டும். வட்டார, மாவட்ட சுகாதார ஒருங்கிணைப்பாளர்களின் ஊதியத்தை முறையே ரூ.10 ஆயிரம், 15 ஆயிரம் என நிர்ணயிக்க வேண்டும். குடும்ப நல நிதி திட்டத்தை கணினி உதவியாளர்களுக்கு விரிவாக்க வேண்டும். ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பணியாற்றும் கணினி பணியாளர்களுக்கும், கணினி உதவியாளருக்கும் உரிய ஊதியம் வழங்க வேண்டும். சாலை மேற்பார்வையாளர்கள், ஒன்றிய பணி மேற்பார்வையாளர்களுக்கு பதவி உயர்வு வேண்டும்.

அமைச்சர் வேலுமணி: 100 நாள் வேலைத்திட்டத்தில் கணினி உதவியாளர்களுக்கு சம்பளமாக ரூ.7ஆயிரம் வழங்கப்பட்டு வந்தது. அதை அதிமுக அரசுதான் ரூ.10ஆயிரமாக உயர்த்தியது.

கே. தங்கவேல்: திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் தாராபுரம் ஒன்றியங்களில் உள்ள கிராம ஊராட்சிகளில் துப்புரவு ஊழியர்களுக்கு வழங்கப்படும் சிறப்பு காலமுறை ஊதியத்தில் பிடித்தம் செய்யப்படுகிறது. அரசு உத்தரவுக்கு மாறாக பிடித்தம் செய்த தொகையை திருப்பி வழங்கிட வேண்டும். துப்புரவுத் தொழிலாளர்களின் பணிமூப்பு அடிப்படையில் துப்புரவு மேற்பார்வையாளர், அலுவலக உதவியாளர், டிரைவர் போன்ற பணிகளுக்கு பதவி உயர்வு வழங்க தனியாக அரசாணை பிறப்பிக்க வேண்டும்.சிறப்புக் காலமுறை ஊதியம் பெற்றுவரும் துப்புரவுத் தொழிலாளர்களுக்கு முழுமையான காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.

ஊராட்சிகளில் பணிபுரியும் மேல் நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். அவர்கள் ஓய்வு பெறும் போது துப்புரவு பணியாளர், குடிநீர் பணியாளர்களுக்கு பணிக்கொடை, ஓய்வூதியம் வழங்க வேண்டும். மருத்துவக் காப்பீடு வழங்கிட வேண்டும். குடும்பத்தில் கணவன் மனைவி இருவரும் பணியாற்றினால், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் வகையில் அவர்களில் ஒருவருக்கு வேலை நேரத்தை மாற்றியமைக்க வேண்டும். துப்புரவுப் பணியாளருக்கு அடுக்குமாடிக் குடியிருப்புகள் வேண்டும்.

அமைச்சர் வேலுமணி: துப்புரவு பணியாளர்கள், உள்ளாட்சிப் பணியாளர்களுக்கு தேவையான வீடுகள் கட்டித்தரப்பட்டுள்ளன.

கே.தங்கவேல்: மக்கள் தொகை உயர்வை ஆய்வு செய்து அதற்கு ஏற்ற விகிதத்தில் துப்புரவுப் பணியாளர்கள் எண்ணிக்கையை மத்திய அரசு நிர்ணயித்துள்ளது. அதனடிப்படையில் தொழிலாளர் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும். ஒப்பந்த அடிப்படையிலும், சுயஉதவிக்குழுக்கள் மூலமாகவும் மிகக்குறைந்த சம்பளத்தில் தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். அரசு சுமார் 17 ஆயிரம் தொழிலாளர்களை நியமித்து அவர்களுக்கு ரூ.2 ஆயிரம் தொகுப்பூதியம் வழங்கப்படுகிறது. நிரந்தரத் தன்மையுடைய துப்புரவுப் பணியில் ஒப்பந்தமுறையை ஊக்குவிப்பதும், தனியார்மயத்தைப் புகுத்துவதும் சரியானதல்ல.

அமைச்சர் வேலுமணி: போதுமான துப்புரவு பணியாளர்கள் தற்போது நியமிக்கப்பட்டுள்ளனர்.

கே.தங்கவேல்: திருப்பூர் உள்ளிட்ட மாநகராட்சிகளில் உள்ளாட்சிப் பணிகளின் தனியார்மயத்தால் நிதிச் சுமை அதிகரிக்கிறது, சேவைத்தரம் குறைந்துள்ளது. புதிய திருப்பூர் மேம்பாட்டுக் கழகம் என்ற தனியார் நிறுவனத்தை பாதுகாக்க, அரசு கொடுத்துவரும் சலுகைகள் நமது கொள்கை அறிக்கையிலேயே குறிப்பிடப்பட்டுள்ளன.மதுரை மாநகராட்சியில் பெரும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. குடிநீரில் சாக்கடை கலக்கிறது. குடிநீர் தட்டுப்பாட்டை போக்கவும் சாக்கடை நீர் குடிநீரில் கலப்பதை தடுக்கவும் உள்ளாட்சித்துறை நடவடிக்கை எடுக்கவேண்டும்.

அமைச்சர் வேலுமணி: மதுரை மாநகராட்சியில் குடிநீர் பிரச்சனையை போக்க தனியாக ஆய்வுக்கூட்டம் நடத்தி, எந்தெந்த மாநகராட்சிகளில் எவ்வளவு தண்ணீர் பற்றாக்குறை இருக்கிறது என்பதை தெரிந்து கொண்டு அதற்கு ஏற்ப குடிநீர் வசதி செய்து தர முதல்வர் உத்தரவிட்டுள்ளார். மதுரை மாநகராட்சியில் லாரிகள் மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது. மதுரை மாநகராட்சிக்கு பாதாளச் சாக்கடைத்திட்டம் தீட்டப்பட்டுள்ளது.

நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம்: மதுரை மாநகராட்சிக்கு தினமும் வைகை அணையில் இருந்து வினாடிக்கு 44 கன அடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. அங்கு சீராக குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது

கே. தங்கவேல்: ஊராட்சிகளில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பெண்கள் மற்றும் தலித் தலைவர்களுக்கு பயிற்சியளித்து அவர்கள் சுயமாக செயல்பட உள்ள தடைகள் அகற்றப்பட வேண்டும். தலித் என்ற காரணத்தால் குடவாசல் பேரூராட்சி பெண் தலைவர், தலைவராக செயல்பட அனுமதிக்கப்படுவதில்லை. துணைத் தலைவரே தலைவராக செயல்படுகிறார்.
உணவு அமைச்சர் காமராஜ்: திருவாரூர் மாவட்டம் குடவாசல் பேரூராட்சியில் பெண் தலைவர் செயல்பட அனுமதிக்கப்படவில்லை என்று உறுப்பினர் கூறுவதை அவைக்குறிப்பில் இருந்து நீக்கவேண்டும். 

(உடனே சிபிஎம் உறுப்பினர்கள் அ.சவுந்தரராசன், கே.பாலபாரதி, கே.பாலகிருஷ்ணன், க.பீம்ராவ், டில்லிபாபு, அண்ணாதுரை, நாகை மாலி உள்ளிட்டோர் எழுந்து பேரவைத்துணைத்தலைவர் மற்றும்அமைச்சர்களிடம் நீண்ட வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். யாரும் பேச அனுமதிக்கப்படவில்லை. சம்பந்தப்பட்ட பெண் தலைவரே இதுகுறித்து முதலமைச்சர், அமைச்சர்ஆகியோரிடம் மனு அளித்துள்ளதாக அ.சவுந்தரராசனும், கே.பாலகிருஷ்ணனும் கூறினார்கள். ``நாங்கள் சொன்னதும் அவைக்குறிப்பில் இருக்கட்டும். அமைச்சர் சொன்னதும் இருக்கட்டும்’’ என்று சொன்னார்கள்.)

உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி: மதுரை மாநகராட்சிக்கு ரூ.514 கோடி செலவில் பாதாளச் சாக்கடைத்திட்டம் தீட்டப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

கே.தங்கவேல்: பாஜக தலைமையிலான மத்திய அரசு, தலித் மக்களுக்கான சிறப்பு ஒதுக்கீட்டு நிதியை 4 சதவீதம் குறைத்திருக்கிறது. சமூக நீதிக்கு எதிரான மத்திய அரசின் வஞ்சனையை தமிழக அரசு கண்டிக்க வேண்டும். இந்த திட்டத்தில் ஒதுக்கப்படும் நிதியை, தலித் மக்கள் வாழ்வாதார வசதிகளை மேம்படுத்த செலவிட வேண்டும்.இந்தியாவில் கையால் மலம் அள்ளுவது சட்டப்படி தடை செய்யப்பட்டுள்ளதென்றாலும், இப்போதும் கழிவுநீர்த் தொட்டிகளில் மனிதர்கள் இறக்கப்படுவதும், மரணிப்பதும் தொடர்கிறது. பாதாளச் சாக்கடை மற்றும் செப்டிக் டேங்குகளை இயந்திரங்கள் மூலமாக மட்டுமே தூய்மைப்படுத்த தமிழக அரசு சட்டம் இயற்ற வேண்டும். தமிழகத்தில் இந்த ஆண்டும் வறட்சி தொடரும் நிலையில், தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் வழங்கப்படும் கூலியை ரூ.200 ஆக உயர்த்துவதுடன் 200 நாட்கள் வேலை வழங்க வேண்டும். அரசு நிர்ணயித்த ரூ.167 கூலியையே கொடுக்காத பகுதிகள் உள்ளன.

இத்திட்டத்தில் பணியாற்றும் பணியாளர்களுக்கு குடிநீர், நிழற்குடை, மருத்துவ முதலுதவி வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும். கிராமப்புற மக்கள், வங்கிகளில் அலைக்களிக்கப்படும் நிலை உள்ளது. இதனை மாற்றி, பணியாற்றும் இடத்திலேயே வங்கி மூலம் பணப்பட்டுவாடா செய்ய வேண்டும். பசுமை வீடுகள் திட்டத்தை பேரூராட்சிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும். தொகுப்பு வீடுகளுக்கான பராமரிப்புப் பணிகளுக்கு அரசு நிதி ஒதுக்க வேண்டும். பழனி நகராட்சிக்கு பாலாற்றில் இருந்து செயல்படுத்தப்படும் குடிநீர் திட்டத்தை விரைவாக முடிக்க வேண்டும்.சென்னை பெருநகரம் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் உள்ள மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் உள்ளாட்சிகளில் திடக்கழிவுகளை அழிப்பது பெரும் பிரச்சனையாக உள்ளது. நீர்நிலைகள், காலியிடங்களில் கழிவுகளைக் கொட்டுவதால் சுற்றுச் சூழலுக்கு கேடு விளைகிறது. இந்த நிலையில் சிறப்பு திடக்கழிவு மேலாண்மை நிதி ரூ. 100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது வரவேற்புக்கு உரியது.

அமைச்சர்வேலுமணி: திடக்கழிவு மேலாண்மைக்காக தமிழக அரசு ரூ.810 கோடியை ஒதுக்கியுள்ளது.

கே.தங்கவேல்: அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் பெண்களுக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க மத்திய அமைச்சரவை சென்ற ஆண்டே ஒப்புதல் வழங்கியுள்ளது. நமது மாநில அரசு அதற்கான சட்டத்தை கொண்டுவந்து அமலாக்க வேண்டும். மொத்தமுள்ள 124 நகராட்சிகளில் 52 நகராட்சிகளில் ஆணையாளர்கள் இல்லை. 10 மாநகராட்சி உதவி ஆணையர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அந்த காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஊராட்சி ஒன்றியங்களில் குறைந்தபட்சம் 7 ஊராட்சிகளும் அதிகபட்சம் 60 ஊராட்சிகளும் உள்ளன.
இந்த நிலையை மாற்றி ஊராட்சி ஒன்றியங்களை மறுவரையறை செய்ய வேண்டும். ஒன்றிய அடிப்படையில் குடிநீர் லாரிகள் மூலம் கிராம ஊராட்சிகளுக்கு குடிநீர் விநியோகம் மேற்கொள்ள வேண்டும். திருநெல்வேலி மாவட்டம் திருவேங்கடம் பேரூராட்சியில் பஸ்நிலையத்திற்கான இடம் கூட்டுறவு அங்காடிக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தப்பிரச்சனையில் மாநில அரசு தலையிட்டு தீர்க்கவேண்டும்.

கே.தங்கவேல்: திருப்பூரில் தனியாரால் செயல்படுத்தப்படும் 3வது குடிநீர் திட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும்மாநகராட்சியுடன் ஆலோசிக்காமலேயே குடிநீர் கட்டணம் உயர்த்தப்படுகிறது. இத்திட்டதை அரசே ஏற்று நடத்த வேண்டும்.

ஜவஹர்லால் நேரு நகர்ப்புற புனரமைப்புத் திட்டம் செயலாக்கப்படும் என்ற நம்பிக்கையில் கடந்த மூன்று ஆண்டுகள் கடந்துவிட்டன. இதுவரை அந்தத் திட்டம் அமலாக்கப்படவில்லை. அதற்கான பணிகளை விரைவுப்படுத்துவதுடன் திருப்பூர் மாநகராட்சிக்கென சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்து உட்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும்.நான்காவது புதிய குடிநீர் திட்டத்தை, மேட்டுப்பாளையத்திலிருந்து குடிநீர் வடிகால் வாரியம் ஏற்படுத்த வேண்டும். 20 வார்டுகளில் மட்டும்உள்ள பாதாள சாக்கடைத் திட்டத்தை மாநகர் முழுவதும் விரிவாக்க வேண்டும்.

திருப்பூர் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட நகராட்சிகளில் பணியாற்றும் 223 தொழிலாளர்கள் தமிழக அரசின் நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை ஆணையாளர் உத்தரவுப்படி கடந்த 2013 ஆண்டு டிசம்பர் 31ம் தேதிமாநகராட்சி ஊழியர்களாக்கப்பட்டுள்ளனர். ஆனால், ஒரு வருடத்திற்கு மேலாக ஊதிய உயர்வு கிடைக்கவில்லை. அவர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும்.

திருப்பூர் மாவட்டத்தில், விபத்து சிசிக்சைக்கென தலைக்காய மருத்துவப் பிரிவு ஒன்று ஏற்படுத்தவேண்டும். தீயணைப்புப் படையின் மீட்புப் பணிகளை துரிதப்படுத்தவும் உயர்ந்த கட்டடங்களில் மீட்புப் பணியாற்றவும், தானியங்கி ஏணியும் ஹைட்ராலிக் மேடையும் கொண்ட வாகனம் உள்ளிட்ட நவீன கருவிகள் கொடுக்க வேண்டும்.

மாநகரத் தெருக்களில் அதிகரிக்கும் ஆதரவற்றகுழந்தைகள் வயோதிகர்கள், மனநிலை பிரழ்ந்தோரை மீட்டு மாறுவாழ்வு அளிக்கவேண்டும். திருப்பூர் உள்ளிட்டமாநகராட்சிகளில் மின்ஆளுமையை முழுமையாக அமலாக்கி, வரிவசூல் நடைமுறையை வெளிப்படையானதாகவும், சுலபமானதாகவும் மாற்ற வேண்டும். திருப்பூர் முழுவதும் பழுதாகியுள்ள மின் கம்பிவடங்களை மாற்றியமைக்க வேண்டும். தேவையான தெருவிளக்குகள் வாங்க சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும்.

0 கருத்துகள்:

Post a Comment

பிரபல பதிவுகள்

அகழ்வாய்வு (1) அடிப்படை வசதிகள் (5) அரசியல் (14) அரசு பள்ளி (2) அரசு மருத்துவமனை (3) ஆண்டு விழா (1) ஆறுகள் (1) உள்கட்டமைப்பு (2) உள்ளாட்சித் துறை (1) ஏற்றுமதியாளர் சங்கம் (1) ஓமியோபதி மருந்து (1) கடிதம் (3) கட்டுரை (1) கல்வி (3) கவன ஈர்ப்பு தீர்மானம் (1) கழிப்பிடம் (1) கழிவுகள் (1) குடிநீர் (4) குடிநீர் கட்டணம் (1) குடிமனைப்பட்டா (1) குழாய் உடைப்பு (1) கூட்டுறவு தேர்தல்கள் (1) கே.தங்கவேல் MLA (37) கொங்கு மண்டலம் (1) சட்டமன்ற உரை (18) சட்டமன்ற கேள்விகள் (8) சாக்கடை (2) சாதி அரசியல் (1) சாயக் கழிவு (2) சாஸ்த்ரா பாக்டீரியா (1) சிப்காட் (1) சிற்பக் கலை (1) சுகாதாரம் (3) சுங்கவரி (1) சுரங்கப்பாதை. (1) செக்யூரிட்டி தொழிலாளர் (1) செய்தி (6) செய்திகள் (25) செவிலியர் (1) சேதுக்கால்வாய் (1) டெங்கு காய்ச்சல் (1) டெட்ராய்ட் (1) தனியார்மயம் (2) தாது மணல் கொள்ளை (1) தால்சீமியா (1) திருப்பூர் (3) திருப்பூர் கோரிக்கைகள் (1) திருப்பூர் தெற்கு தொகுதி (3) திருப்பூர் மாநகராட்சி (1) துப்புரவு தொழிலாளர் (1) துறைமுகங்கள் (1) தென் மாநிலம் (1) தொழிலாளர் (9) தொழில் (8) தொழில்துறை (1) நிகழ்வு (1) நிகழ்வுகள் (17) நிதி (1) நெடுஞ்சாலைகள் (3) நேரடி ஆய்வு (5) நொய்யலாறு (2) பத்திரப்பதிவு (2) பிரசுரம் (11) பேட்டி (2) பொது முதலீடுகள் (1) பொதுப்பணித்துறை (1) போக்குவரத்து (1) மக்கள் கோரிக்கை (7) மக்கள் கோரிக்கை மாநாடு (3) மக்கள் சந்திப்பு (9) மத்திய பட்ஜெட் (1) மருத்துவமனை (1) மருத்துவம் (1) மாசுபடுதல்.குடிநீர். (1) மாநகராட்சி (2) மாவட்ட ஆட்சியர் (1) மின்சாரம் (1) மின்வெட்டு (4) மெட்ரோ ரயில் (1) மேம்பாலம் (1) ரயில்வே (1) ரயில்வே கேட் (1) ரேசன் அட்டை (1) வணிகவரி (1) வருவாய்த்துறை (1) வாக்குறுதிகள் (1) வாழ்த்துரை (2) வியாபாரிகள் (1) விவசாயம் (4) வெள்ளம் (1)