திருப்பூரில் தொழிலாளர்கள் நிரந்தரமாகத் தங்கி வேலை செய்வதற்கு வசதியாக தங்கும் விடுதிகள் அமைத்துத் தர வேண்டும் என்று தமிழக சட்டப் பேரவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கே.தங்கவேல் எம்எல்ஏ வலியுறுத்தினார்.
இது தொடர்பாக சட்டமன்றத்தில் கடந்த 9ஆம் தேதி கே.தங்கவேல் எம்எல்ஏ கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த மாநில தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன், தொழிலாளர் நலநிதிச் சட்டப்படி சுற்றுலா தலங்களில் மட்டுமே விடுமுறை இல்லங்கள் கட்ட வழிவகை செய்யப்பட்டுள்ளது. எனவே திருப்பூர் போன்ற தொழில் நகரங்களில் தொழிலாளர் தங்கும் விடுதிகள் கட்ட வழிவகை ஏதுமில்லை என்றார்.மீண்டும் கேள்வி எழுப்பிய கே.தங்கவேல் எம்எல்ஏ., “ திருப்பூரில் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து மட்டுமின்றி, வட மாநிலங்களில் இருந்தும் தொழிலாளர்கள் வந்து வேலை செய்கின்றனர். இவர்கள் வாடகைக்கு வீடு எடுத்துத் தங்கும் அளவுக்கு வருமானம் இல்லை. எனவே இங்கு ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியாக விடுதிகள் அமைத்துத் தந்தால் அவர்கள் வேலை செய்யவும், சிறுதொழில் பாதுகாக்கப்படுவதற்கும் உதவியாக இருக்கும்” என்றார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் செல்லப்பாண்டியன், “தொழிலாளர் தங்கும் விடுதிகள் தான் சுற்றுலா தலங்களில் அமைக்கப்படும். வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு விடுதி கட்ட வேண்டும் என்ற கருத்து இந்த கேள்வியில் எழாது. தொழிலாளர்களுக்காக அவர்களது பிரச்சனைகளை வெளியூரில், சென்னைக்குச் செல்ல வேண்டும் என்று சொன்னால், அங்கே சென்று பேசுவதற்காக இங்கே ஜீவா இல்லம் எம்ஜியாரால் கட்டப்பட்டது. அதேபோல் தொழிலாளர்களும் பணக்காரர்களைப் போல, பிறரைப் போல அவர்களும் அந்த சுகத்தை அனுபவிக்க வேண்டும் என்ற அடிப்படையில் தான் எம்ஜிஆர் ஆட்சிக்காலத்தில் வால்பாறை, குற்றாலம், மாமல்லபுரத்தில் விடுதிகள் கட்டப்பட்டன. ஜெயலலிதா மூன்றாம் முறையாக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, ஜீவா இல்லத்தை பழுது பார்த்து புத்துணர்வூட்ட ரூ.30 லட்சம் கொடுத்து இன்று புதுப்பொலிவுடன் திகழ்கிறது. தொழிலாளர் தங்கும் விடுதியை இங்கிருக்கும் தொழில் ஸ்தாபனங்கள், அதைச் சார்ந்த உரிமையாளர்கள், முதலாளிகளிடம் தான் கேட்க வேண்டும்” என்று கூறினார்.
மீண்டும் கேள்வி எழுப்பிய கே.தங்கவேல், “ தொழிலாளர்களுக்குத் தங்கும் விடுதி போல அல்ல, நிரந்தரமாக அவர்கள் தங்கி வேலை செய்கின்ற அடிப்படையிலேயே ஹாஸ்டல் போல அவர்களுக்கு அமைத்துக் கொடுக்க வேண்டும். இது புதிய முறைதான், ஏற்கனவே இல்லை என்பதால் எப்போதும் இல்லை என்று சொல்ல வேண்டியதில்லை. அதற்கான ஆலோசனைகளை தொழிலாளர் நலத்துறை மேற்கொள்ள வேண்டும். முதல்வரும் பரிசீலிக்க வேண்டும்.” என்று வலியுறுத்திக் கேட்டுக் கொண்டார். இதன் பிறகு அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன், “சட்டமன்ற உறுப்பினரின் கோரிக்கையை ஏற்று முதல்வரின் கவனத்துக்கு எடுத்துச் சென்று பரிசீலிக்கப்படும்.” என்று கூறினார்.
0 கருத்துகள்:
Post a Comment