சென்னை, ஏப். 2 -
நொய்யலாற்றில் சாய பட்டறைக் கழிவுகள் கலப்பதை தடுக்கவும், ஆற்றை தூய்மைப்படுத்தவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா? என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் தெற்கு தொகுதி உறுப்பினர் கே.தங்கவேல் கேள்வி எழுப்பினார்.
சட்டப்பேரவையில் செவ்வாயன்று (ஏப்.2) இது தொடர்பாக கே.தங்கவேல் எழுப்பிய வினாக்களும், அதற்கு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் அளித்த பதில்களும் வருமாறு:
கே.தங்கவேல்: நொய்யலாற்றை தூய்மைப்படுத்திட அரசு நடவடிக்கை எடுக்குமா?
அமைச்சர்: அதற்கான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.
கே.தங்கவேல்: சங்கிலி பள்ளம், ஜம்மனை பள்ளம், மாநகராட்சியின் பல பகுதிகளில் இருந்தும் கழிவு நீர் நொய்யலாற்றில் கலக்கிறது. ஏற்கெனவே, 250 சாய ஆலைகளில் இருந்து வெளியேறும் ரசாயன கழிவு சுத்திகரிக்கப்பட்டு ஜிரோ டிகிரி என்ற அளவில் ஆற்றில் கலக்கப்படுகிறது.
தற்போது, பல்வேறு இடங்களில் அனுமதி பெறாமல் உள்ள சாய ஆலைகளில் இருந்து வெளியேற்றப்படும் ரசாயன கழிவுகளால் விவசாயம் பாதிக்கப்படுகிறது. முறைபடி செயல்பட்டு வரும் சாய ஆலைகளும் பாதிக்கப்படுகிறது. எனவே, சுற்றுச்சூழல் துறை ஆய்வு செய்து பல ஆலைகளுக்கு சீல் வைத்துள்ளது.
சுற்றுச்சூழல் துறை அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்ட ஆலைகள் வேறு பெயரில் வேறு இடத்தில் இயங்குகின்றன. அங்கிருந்து கழிவுகளை ஆற்றில் கலக்கின்றன. இது தொடர்பாக அதிகாரிகளிடம் புகார் செய்தால் சீல் வைப்பதற்கு மட்டுமே தங்களுக்கு அதிகாரம் இருப்பதாக கூறுகினறனர். எனவே, தொழிலும், விவசாயமும் பாதிக்காத வகையில், ஆற்றை தூய்மைப்படுத்திட அரசு நடவடிக்கை எடுக்குமா?
அமைச்சர்: மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கவனத்தோடு செயல்பட்டு வருகிறார்கள். எந்த ஒரு சாய பட்டறையும் அனுமதியின்றி செயல்படவில்லை. நொய்யலாற்றை தூய்மைப்படுத்த தமிழக அரசு ஏற்கெனவே 200கோடி ரூபாயை வட்டியில்லா கடனாக வழங்கி உள்ளது.
நொய்யலாற்றின் தூய்மையை கண்காணிக்கவும், தூய்மை செய்யவும், ஆற்றில் உள்ள காரஅமிலத் தன்மையை கண்காணிக்கவும், நீர் தன்மையை அறியவும் கருவிகள் வாங்க தமிழக அரசு 50லட்சம் ஒதுக்கியது. அதன்படி, காசிபாளையம், ஒரத்தப்பாளையம் உள்ளிட்ட 3 இடங்களில் கண்காணிப்பு கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. ஜீரோ டிகிரி தண்ணீர்தான் ஆற்றில் விடப்படுகிறது.
கே.தங்கவேல்: அனுமதி இல்லாமல் செயல்பட்டு வந்த நூற்றுக்கணக்கான ஆலைகளுக்கு மாசுக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் சீல் வைத்தனர். அதன்பிறகு, அந்த ஆலைகள் வேறு பெயரில் வேறு இடத்தில் செயல்படுகின்றன. அங்கிருந்து கழிவு நீர் நொய்யலாற்றில் கலக்கப்படுகிறது. இதனால் விவசாயம் மட்டுமின்றி, தொழில்வளமும் பாதிக்கப்படுகிறது. ஜீரோ டிகிரி அளவுக்கு சுத்திகரிக்காமல் கழிவு நீர் ஆற்றில் விடுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?
அமைச்சர்: அனுமதியின்றி சாய பட்டறைகள் செயல்பட வாய்ப்பு இல்லை. மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் முறையாக கண்காணித்து வருகிறது. தவறான முறையில் ஆலைகள் செயல்பட்டால் அவை மூடப்படும்.
0 கருத்துகள்:
Post a Comment