கே.தங்கவேல்: அனைத்து தொழில்களுக்கும் உயிர் மூச்சாக இருந்துவரும் மின்சாரம் - 1993 ஆம் ஆண்டுக்கு பின்னர் வர்த்தக பொருளாக மாற்றப்பட்டது. மத்தியில் நரசிமராவ் பிரதமராக இருந்த காலகட்டத்தில் தொடங்கிய மின்சாரத் துறை சீர்திருத்தம் பிஜேபி ஆட்சிக் காலத்தில் மின் சார சட்டம் 2003 ஆக வடிவவெடுத்தது. இந்தச் சீர்திருத்தங்கள் வற்புறுத்தப்பட்ட ஒவ்வொரு மாநிலத்திலும் கடுமையான பிரச்சனைகள் ஏற்பட்டன. பத்தாண்டுகளுக்கு முன் மகாராஷ்டிராவில் மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்திய என்ரான் நிறுவனம் துரத்தியடிக்கப்பட்டதை நாம் பார்த்தோம்.
தமிழகத்திலும், 1993 ஆம் ஆண்டு வரை தமிழக மின்சார வாரியம், - ரூ.2575.30 கோடி வருவாயைப் பெற்றது. தற்போது மிகப்பெருமளவில் நட்டமடைந்திருக்கிறது. (கடந்த ஆகஸ்ட் 2011 ஆகஸ்ட் 17 ஆம் தேதி) எரிசக்தி துறை விவாதத்தில் பேசிய அமைச்சர், இந்த நிலைக்கு - மின் கொள்முதலில் வெளிப்படையான கொள்கையைக் கடைப்பிடிக்காததும் ஒரு காரணம் எனக் குறிப்பிட்டார். தனியார் மின் உற்பத்தித் துறையின் நுழைந்ததற்கு பிறகுதான் இப்படியான விளைவுகள் நடந்திருக்கின்றன.
1997 ஆம் ஆண்டு தமிழகத்தில் சுமார் 5 ஆயிரம் மெகாவாட் அளவிலான திட்டங்கள் தனியாரிடம் ஒப்படைத்து செயல்படுத்தப்பட்டன ஆனால் அவர்களால் வெறும் 1180 மெகாவாட் (23 சதவீதம்) உற்பத்தியைத்தான் சாதிக்க முடிந்தது. எனவே தனியாரை சார்ந்து நமது மின் தேவையை பூர்த்தி செய்துகொள்வது இயலாது.
அமைச்சர் விஸ்வநாதன்: அதிமுக அரசும் அதைத்தான் வலியுறுத்தி வருகிறது. தற்போது ஏற்பட்டுள்ள மின்வெட்டு பிரச்சனைக்கு கடந்த கால அரசுதான் காரணம். தேவைக்கு ஏற்ப மின் உற்பத்தியயை அதிகரிக்க கவனம் செலுத்த தவறியதால் இன்று நாம் மின்வெட்டை அனுபவித்துக்கொண்டிருக்கிறோம். இருப்பினும் இந்த பிரச்சனையை போக்க அதிமுக அரசு விரைவாக நடவடிக்கை எடுத்துவருவதால் பிரச்சனை படிப்படியாக குறைந்து வருகிறது. இடைப்பட்ட காலத்தில் மின்சாரத்தை வழங்கவேண்டும் என்றால் நமது மின்திட்டங்கள் உற்பத்தியை தொடங்கும் வரை தனியாரிடமிருந்து மின்சாரத்தை வாங்கவேண்டிய கட்டாயம் உள்ளது. அதற்காக தனியாரை நம்பியே மின்வெட்டுபிரச்சனைக்கு தீர்வு காணமுடியாது என்பதை அரசு ஒப்புக்கொள்கிறது. தற்போதுள்ள பிரச்சனையை சமாளிக்கத்தான் தற்காலிகமாக தனியாரிடமிருந்து மின்சாரம் வாங்கப்படுகிறது. படிப்படியாக தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் செயல்பாட்டுக்கு வரும்போது தனியாரிடமிருந்து தற்போது வாங்கப்படும் மின்சாரமும் படிப்படியாக குறைக்கப்படும். ஒருவேளை அவர்கள் உற்பத்தி செய்யக்கூடிய மின்சாரம் முழுவதையும் நமக்கு அளித்தால் போதும். ஏனென்றால் நாம் செய்ய வேண்டிய முதலீட்டை அவர்கள் செய்துள்ளார்கள். காரணம் அதற்கான விலைகளும் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டுள்ளதால் பெரிய இழப்பு வரப்போவதில்லை. இருப்பினும் நிரந்தரமாக இப்பிரச்சனைக்கு தீர்வு காண புயல் வேகத்தில் நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.
கோவை, திருப்பூர் போன்ற பகுதிகளில் மின்சார வெட்டு காரணமாக சிறுதொழில்கள் பாதிக்கப்பட்டது உண்மைதான். குறைந்த பட்சம் 4மணிநேரம் மின்சாரத்தை தொடர்ச்சியாக வழங்கவேண்டும் என்று சிறுதொழில் முனைவோர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க மின்சாரம் வழங்கப்படுகிறது. இதனால் மிகப்பெரிய இழப்பு தவிர்க்கப்பட்டுள்ளது.நிரந்தரமா க இந்த பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டவுடன் உங்கள் திருப்பூரில் தொழில்வளம் பன்மடங்கு உயரும்.
கே.தங்கவேல்: மின்சார சட்டம் 2003 ஐ எதிர்ப்பதுடன் புதிய மின் திட்டங்களை அரசு முதலீட்டில் செயல்படுத்த வேண்டும். அதுதான் மக்களுக்கும் நன்மையைக் கொடுக்கும், கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் எண்ணற்ற தனியார் தொழில் நிறுவனங்களுக்கும் அதுதான் நல்லது. எனவே, பாதிக்கப்பட்ட தனியாரும் சேர்ந்து தனியார்மயத்தை எதிர்க்கவேண்டும்.
அமைச்சர் விஸ்வநாதன்: நீங்கள் கோரிக்கை வைப்பதற்கு முன்பாகவே முதல்வர் புதிய மின்திட்டங்களை அறிவித்துள்ளர். ஏராளமான மின்திட்டங்களை அரசு செயல்படுத்த உள்ளது.
0 கருத்துகள்:
Post a Comment