சென்னை, மே 14-
மின்சார உற்பத்தியை பெருக்கவேண்டும் என்றால் தமிழக அரசு தனியாரை நம்பியிருக்கக்கூடாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் கே. தங்கவேல் கேட்டுக்கொண்டார்.
சட்டப்பேரவையில் செவ்வாயன்று (மே 14) எரிசக்தி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறையின் மானியக் கோரிக்கை நடைபெற்ற விவாதத்தில் அவர் பேசியது வருமாறு:
இந்தியாவிலேயே அதிக அளவில் தொழில் வளம் பெற்ற மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. அனைத்து வீடுகளும் மின் இணைப்பு பெற்றுள்ள சாதனையைப் படைத்திட்ட தமிழகம் தனிநபர் மின் நுகர்விலும் தேசிய சராசரிக்கு கூடுதலாக கொண்டிருக்கிறது. ஆனால், தற்போது பெரிய அளவில் மின் பற்றாக்குறையால் தவித்துவருகிறது. தமிழகம் முழுவதும் நிலவும் மின்வெட்டால் தொழில் நசிவும், வேலை இழப்பும் ஏற்பட்டும் தமிழகத்தின் வளர்ச்சி பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. கிராமப்புறங்களில் 12 மணி நேரத்திற்கு மேல் மின் வெட்டு நிலவுவதால் விவசாயமும் பாதிக்கப்பட்டுள்ளது.
மின்சாரத்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்: தமிழகத்தில் எந்தபகுதியிலும் 12 மணிநேர மின்வெட்டு இல்லை.கடந்த ஒருவாரமாக கிராமப்புறங்களில் 10 மணிநேரம் சென்னையில் 2மணிநேரம் இருந்த மின்வெட்டு நீக்கப்பட்டு எல்லா நேரமும் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. மின்வெட்டு இருந்தாலும் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு தமிழ்நாட்டில் தனிநபர் மின்சார நுகர்வு அளவு அதிகமாக உள்ளது.மின்சார நுகர்வும் அதிகமாக உள்ளதால் மற்ற மாநிலங்களை விட நமக்கு மின்சாரத்தேவையும் அதிகமாக உள்ளது. மின்சார தேவை அதிகமாக உள்ளதால் அதற்கு ஏற்ப அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது. வரும் ஜூன்மாதம் முதல் மின்வெட்டு படிப்படியாக குறைக்கப்பட்டு இந்த ஆண்டு இறுதிக்குள் தமிழ்நாடு மின்சார உற்பத்தியில் தன்னிறைவு பெறும். அதற்கு ஏற்ப புயல் வேகத்தில் பணிகள் நடைபெற்று வருகின்றன.
கே.தங்கவேல்: கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், கரூர் மாவட்டங்கள் பெரிய அளவில் பாதித்துள்ளன. இந்த தொழில்கள் மூலம் மின்சார வாரியத்திற்கு வரும் வருமானமும், அரசுக்கு கிடைத்துவந்த வரிவருவாயும் தொழிலாளர்களுக்கு கிடைத்த வருவாயும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த சூழலில், தமிழக முதல்வர் 16 ஆயிரத்தி 350 கோடி ரூபாய் மதிப்பில் அறிவித்துள்ள புதிய மின் திட்டங்களையும், மின் வழித்தடங்களை மேம்படுத்தும் திட்டங்களையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வரவேற்கிறோம்.
நீலகிரி மாவட்டம் சில்லஹல்லாவில் சுமார் 2 ஆயிரம் மெகாவாட் உற்பத்தி திறனோடு அமைக்கப்படவுள்ள நீரேற்று புனல் மின் திட்டம் மிகை மின்சாரத்தை சேமித்து பயன்படுத்தும் நல்ல அம்சங்களை உள்ளடக்கியுள்ளது. ஆனால், அதற்காக 10 ஆண்டுகள் காத்திருக்கவேண்டும். இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வருவதற்குள் நமது மின்தேவை பல மடங்கு அதிகரித்துவிடும்.
அமைச்சர் விஸ்வநாதன்: புதிய மின்சார உற்பத்தி திட்டங்களை துவங்கவேண்டும் என்றால் அனல் மின்நிலையமாக இருந்தால் 3 முதல் மூன்றரை ஆண்டுகள் ஆகும். மற்ற மின்திட்டங்கள் என்றால் ஏறத்தாழ 2 ஆண்டுகள் ஆகும். நிரேற்று புனல் மின்நிலையங்களை செயல்படுத்தவேண்டும் என்றால் பத்தாண்டுகளுக்கு குறைவாக செய்யமுடியாது. கடாம்பாறை புனல் மின்திட்டத்தை அமைக்க பத்தாண்டுகள் ஆனது. சாதாரண மின்திட்டமாக இருந்தால் கூடமலைகளை குடைந்து சுரங்கப்பணிகளை செய்து முடிக்க 8முதல் 10ஆண்டுகள் ஆகும். பத்தாண்டுகள் ஆகும் என்பதற்காக ஒரு திட்டத்தை செயல்படுத்தாமல் இருக்கமுடியாது. அதிமுக அரசை பொறுத்தவரை இப்போது இருக்கிற மக்களுக்கும் நாளைய மக்களுக்கும் எதிர்கால தலைமுறைக்கும் மின்சாரம் கிடைக்கவேண்டும் என்ற நோக்கத்தில் தான் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. திமுக தலைவரும் இந்த திட்டத்தை குறை கூறி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதே போல் நீங்களும் கூறுகிறீர்கள்.
வணிகவரித்துறை அமைச்சர் ரமணா: மின்சார பற்றாக்குறையால் வரிவருவாய் குறைந்துள்ளதாக உறுப்பினர் கூறினார். 2012-13 ஆம் நிதியாண்டில் வரிவருவாய் இலக்கு ரூ. 45825 கோடி. அரசு எய்தது ரூ. 45885 கோடி ரூ.60கோடி கூடுதலாக கடந்த ஆண்டு எய்தப்பட்டுள்ளது.
கே.தங்கவேல்: நீரேற்று புனல் மின்திட்டங்களுக்கு பத்தாண்டுகள் ஆகும். அதன் பின்னரும் மின் தேவை அதிகமாக இருக்கும் என்று தான் நான் சொன்னேன். திமுக தலைவர் கருணாநிதி சொன்னது போல் நான் சொல்லவில்லை.
அமைச்சர் விஸ்வநாதன்: நிரேற்று புனல் மின்திட்டங்கள் என்றால் பத்தாண்டுகள் ஆகும். அதற்காக அந்த திட்டத்தை கைவிட்டுவிட முடியுமா?
கே.தங்கவேல்: அனைத்து தொழில்களுக்கும் உயிர் மூச்சாக இருந்துவரும் மின்சாரம் - 1993 ஆம் ஆண்டுக்கு பின்னர் வர்த்தக பொருளாக மாற்றப்பட்டது. மத்தியில் நரசிமராவ் பிரதமராக இருந்த காலகட்டத்தில் தொடங்கிய மின்சாரத் துறை சீர்திருத்தம் பிஜேபி ஆட்சிக் காலத்தில் மின் சார சட்டம் 2003 ஆக வடிவவெடுத்தது. இந்தச் சீர்திருத்தங்கள் வற்புறுத்தப்பட்ட ஒவ்வொரு மாநிலத்திலும் கடுமையான பிரச்சனைகள் ஏற்பட்டன. பத்தாண்டுகளுக்கு முன் மகாராஷ்டிராவில் மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்திய என்ரான் நிறுவனம் துரத்தியடிக்கப்பட்டதை நாம் பார்த்தோம்.
தமிழகத்திலும், 1993 ஆம் ஆண்டு வரை தமிழக மின்சார வாரியம், - ரூ.2575.30 கோடி வருவாயைப் பெற்றது. தற்போது மிகப்பெருமளவில் நட்டமடைந்திருக்கிறது. (கடந்த ஆகஸ்ட் 2011 ஆகஸ்ட் 17 ஆம் தேதி) எரிசக்தி துறை விவாதத்தில் பேசிய அமைச்சர், இந்த நிலைக்கு - மின் கொள்முதலில் வெளிப்படையான கொள்கையைக் கடைப்பிடிக்காததும் ஒரு காரணம் எனக் குறிப்பிட்டார். தனியார் மின் உற்பத்தித் துறையின் நுழைந்ததற்கு பிறகுதான் இப்படியான விளைவுகள் நடந்திருக்கின்றன.
1997 ஆம் ஆண்டு தமிழகத்தில் சுமார் 5 ஆயிரம் மெகாவாட் அளவிலான திட்டங்கள் தனியாரிடம் ஒப்படைத்து செயல்படுத்தப்பட்டன ஆனால் அவர்களால் வெறும் 1180 மெகாவாட் (23 சதவீதம்) உற்பத்தியைத்தான் சாதிக்க முடிந்தது. எனவே தனியாரை சார்ந்து நமது மின் தேவையை பூர்த்தி செய்துகொள்வது இயலாது.
அமைச்சர் விஸ்வநாதன்: அதிமுக அரசும் அதைத்தான் வலியுறுத்தி வருகிறது. தற்போது ஏற்பட்டுள்ள மின்வெட்டு பிரச்சனைக்கு கடந்த கால அரசுதான் காரணம். தேவைக்கு ஏற்ப மின் உற்பத்தியயை அதிகரிக்க கவனம் செலுத்த தவறியதால் இன்று நாம் மின்வெட்டை அனுபவித்துக்கொண்டிருக்கிறோம். இருப்பினும் இந்த பிரச்சனையை போக்க அதிமுக அரசு விரைவாக நடவடிக்கை எடுத்துவருவதால் பிரச்சனை படிப்படியாக குறைந்து வருகிறது. இடைப்பட்ட காலத்தில் மின்சாரத்தை வழங்கவேண்டும் என்றால் நமது மின்திட்டங்கள் உற்பத்தியை தொடங்கும் வரை தனியாரிடமிருந்து மின்சாரத்தை வாங்கவேண்டிய கட்டாயம் உள்ளது. அதற்காக தனியாரை நம்பியே மின்வெட்டுபிரச்சனைக்கு தீர்வு காணமுடியாது என்பதை அரசு ஒப்புக்கொள்கிறது. தற்போதுள்ள பிரச்சனையை சமாளிக்கத்தான் தற்காலிகமாக தனியாரிடமிருந்து மின்சாரம் வாங்கப்படுகிறது. படிப்படியாக தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் செயல்பாட்டுக்கு வரும்போது தனியாரிடமிருந்து தற்போது வாங்கப்படும் மின்சாரமும் படிப்படியாக குறைக்கப்படும். ஒருவேளை அவர்கள் உற்பத்தி செய்யக்கூடிய மின்சாரம் முழுவதையும் நமக்கு அளித்தால் போதும். ஏனென்றால் நாம் செய்ய வேண்டிய முதலீட்டை அவர்கள் செய்துள்ளார்கள். காரணம் அதற்கான விலைகளும் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டுள்ளதால் பெரிய இழப்பு வரப்போவதில்லை. இருப்பினும் நிரந்தரமாக இப்பிரச்சனைக்கு தீர்வு காண புயல் வேகத்தில் நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.
கோவை, திருப்பூர் போன்ற பகுதிகளில் மின்சார வெட்டு காரணமாக சிறுதொழில்கள் பாதிக்கப்பட்டது உண்மைதான். குறைந்த பட்சம் 4மணிநேரம் மின்சாரத்தை தொடர்ச்சியாக வழங்கவேண்டும் என்று சிறுதொழில் முனைவோர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க மின்சாரம் வழங்கப்படுகிறது. இதனால் மிகப்பெரிய இழப்பு தவிர்க்கப்பட்டுள்ளது.நிரந்தரமா க இந்த பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டவுடன் உங்கள் திருப்பூரில் தொழில்வளம் பன்மடங்கு உயரும்.
கே.தங்கவேல்: மின்சார சட்டம் 2003 ஐ எதிர்ப்பதுடன் புதிய மின் திட்டங்களை அரசு முதலீட்டில் செயல்படுத்த வேண்டும். அதுதான் மக்களுக்கும் நன்மையைக் கொடுக்கும், கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் எண்ணற்ற தனியார் தொழில் நிறுவனங்களுக்கும் அதுதான் நல்லது. எனவே, பாதிக்கப்பட்ட தனியாரும் சேர்ந்து தனியார்மயத்தை எதிர்க்கவேண்டும்.
அமைச்சர் விஸ்வநாதன்: நீங்கள் கோரிக்கை வைப்பதற்கு முன்பாகவே முதல்வர் புதிய மின்திட்டங்களை அறிவித்துள்ளர். ஏராளமான மின்திட்டங்களை அரசு செயல்படுத்த உள்ளது.
கே.தங்கவேல்: மின் தேவைகளை பூர்த்தி செய்திட உடனடி நடவடிக்கைகள் அவசியம் மின் பற்றாக்குறையை சீராக பகிர்ந்துகொள்ளாததால் மாநிலத்திற்குள்ளாகவே சமச்சீரற்ற தொழில் சூழல் நிலவுகிறது. சென்னையில் செயல்படும் ஒரு நிறுவனத்துடன் மாநிலத்தின் இதர பகுதியில் செயல்படும் நிறுவனங்கள் போட்டியிட முடியாத சூழல் உள்ளது. இதனை மாற்ற வேண்டும். மின்வெட்டு தொடரும் காலத்தில் - மின் ஆக்கி (ஜெனரேட்டர்) மூலம் மின் உற்பத்தி செய்திட ஏற்படும் கூடுதல் செலவை ஈடுகட்ட டீசலுக்கு மானியம் வழங்க வேண்டும். விவசாய இணைப்பு கோரிய 6 லட்சம் விண்ணப்பங்களுக்கு இணைப்பு வழங்க வேண்டும்.
தொழில்துறை அமைச்சர் தங்கமணி: சென்னையைபோல் மற்ற பகுதிகளில் சமச்சீரான தொழில்வளர்ச்சி இல்லை என்று உறுப்பினர் கூறுகிறார். தென் மாவட்டங்களில் தொழில்வளர்ச்சி குறைவாக இருப்பதாக நீங்கள் கூறினீர்கள். வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு தென் மாவட்டங்களில் தொழில்துவங்கவேண்டும் என்பதற்காக பல சலுகைகளை அறிவித்துள்ளார். இதனால் சமச்சீரான தொழில்வளர்ச்சி ஏற்படும். 9 மாவட்டங்களில் தொழில்துவங்க முன்வருவோருக்கு 50 விழுக்காடு மானிய விலையில் இடம் வழங்கப்படும் என்பன உள்ளிட்ட பல சலுகைகளை முதல்வர் அறிவித்துள்ளார்.
கே.தங்கவேல்: மின் வாரியத்தில் மொத்தமுள்ள சுமார் 1 லட்சத்து 60 ஆயிரம் பணியிடங்களில் சுமார் 50 ஆயிரம் இடங்கள் காலியாக உள்ளன. இந்த மனித வளப் பற்றாக்குறையை சரி செய்திட அரசு 17 ஆயிரம் புதிய நியமனங்களுக்கு உத்தரவாதமளித்துள்ள வரவேற்கத்தகுந்ததே. ஆனால் அது போதுமானதல்ல. காலிப்பணியிடங்கள் நீடிப்பதால் மின் தடங்களில் ஏற்படும் பிரச்சனைகள் சரிப்படுத்த காலதாமதமாகிறது. மின் இழப்பு அதிகரிக்கிறது. அரசுக்கும் கடுமையான இழப்பு ஏற்படுகிறது.
4 ஆண்டுகளுக்கு ஒரு முறை மின் வாரிய ஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஊதிய உயர்வு - கடந்த 1.10.2011 முதல் வழங்கப்படவில்லை. சென்ற ஆண்டில் இதுகுறித்து உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் பேசியபோது பதிலளித்த அமைச்சர் விஸ்வநாதன் பேச்சுவார்த்தைக் குழு அமைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார். இந்தக் குழு கடந்த ஓராண்டில் ஒருமுறை மட்டுமே கூடியுள்ளது. பேச்சுவார்த்தையை தொடர்ந்து, ஊதிய உயர்வு வழங்கிட வேண்டும்.
அமைச்சர் விஸ்வநாதன்: நான்காண்டுகளுக்கு ஒருமுறை புதிய ஊதிய உயர்வு ஒப்பந்தம் போட வேண்டும். நிச்சயமாக தமிழ்நாடு மின்சார வாரியத் தலைவர் தலைமையில் அதிகாரிகள், அனைத்து தொழிற்சங்கத்தலைவர்களை உள்ளடக்கிய குழு விரைவாக ஊதிய உயர்வு ஒப்பந்த செட்டில்மென்டை இறுதி செய்யும்.
கே. தங்கவேல்: காற்றாலை மின்சாரம் தற்போதையே தேவையை நிறைவு செய்து கொண்டிருக்கிறது. கடந்த நான்கு ஐந்துநாட்களாக காற்றாலை மின்சாரம் கூடுதலாக உற்பத்தியாகிறது. ஆனால் கூடுதலாக உற்பத்தியானாலும் அதை பயன்படுத்த முடியாத நிலை இருப்பதாக வாரியம் கூறுகிறது. மேலும் காற்றாலை மின் உற்பத்தியாளர்களுக்கு ரூ 2500கோடி அரசுபாக்கி வைத்துள்ளதாக கூறுகிறார்கள். இந்த பாக்கியை உடனே செலுத்தவேண்டும்.
அமைச்சர் விஸ்வநாதன்: காலையில் ஒரு நாளிதழில் வந்துள்ள செய்தியை பார்த்து விட்டு உறுப்பினர் பேசுகிறார். அந்த செய்தி முற்றிலும் தவறு. காற்றாலை மின்சாரம் மூலமாக திங்களன்று 58 மில்லியன் யூனிட் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
காற்றாலை மின்சார உற்பத்தி அளவு 3ஆயிரம் மொகாவாட். நமது கொள்முதலும் 3ஆயிரம் மெகாவாட். அனைத்தும் கொள்முதல் செய்யப்படுகிறது. காற்றாலை மின் உற்பத்தி அதிகரிக்கும் போது அனுமானத்தின் பெயரில் சில பத்திரிகைகள் அதை கொள்முதல் செய்வதற்கு அரசு மறுக்கிறது என்று எந்த அடிப்படையில் சொல்கிறார்கள் என்று தெரியவில்லை. இருப்பினும் வருங்காலத்தில் அந்த சூழ்நிலை ஏற்படும். அது தவிர்க்கமுடியாதது. மின்சார அதிர்வு எண்ணை 50 ஆக பராமரிக்கவேண்டியுள்ளது. இந்த அளவை அது தாண்டிவிட்டால் எல்லா மின் கட்டமைப்புகளிலும் பழுது ஏற்பட்டு விடும். காற்றாலை மின்உற்பத்தி நிரந்தரமானது அல்ல. திடீரென்று கூடும். குறையும். அதை நிரந்தர மின்உற்பத்தி திட்டங்களை போல் கட்டுப்படுத்தமுடியாது. எதிர்பாராத நேரங்களில் இந்த காற்றாலை மின்சாரம் அதிகமாக உற்பத்தியாகி மின் அதிர்வு எண் 50.02 என்ற அளவுக்கு மேல் போனால் ஒட்டுமொத்தமாக தென்மாவட்டங்கள் முழுவதும் மின் கட்டமைப்புகள் துண்டிக்கப்பட்டு விடும். 50.02 அதிர்வு எண்ணுக்கு மேல் செல்லும் போது அதை கட்டுப்படுத்தவும் தமிழ்நாடு மின்சார வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது. தனியார் துறையினரிடம் இருந்து வாங்கும் மின்சாரத்தை கட்டுப்படுத்த முடியும். நீர்மின்சாரத்தை கட்டுப்படுத்த முடியும்.
ஆனால் அனல்மின்நிலையங்களில் அப்படி செய்யமுடியாது. பழுது ஏற்பட்டு விட்டு மீண்டும் மின்சாரத்தை உற்பத்தி செய்யவேண்டும் என்று சொன்னால் நாள் கணக்கில் ஆகும். காற்றாலைகளில் திடீரென்று மின்சாரம் அதிகரிக்கும் போது அனல் மின்நிலையங்களில் செய்யும் மின்சாரத்தை நிறுத்திவிட்டால் காற்றாலை மின்சாரம் குறைந்த பின்னர் அனல் மின்நிலையங்களில் உடனே உற்பத்தியை தொடங்கமுடியாது. புனல் மின்நிலையங்களில் மட்டும் உற்பத்தியை குறைத்துக்கொள்கிறோம். இப்படி செய்த பின்னரும் சில நேரங்களில் கூடுதல் மின்சாரம் வந்தால் சில மணிநேரங்களில் மின் கட்டமைப்புகளை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த பிரச்சனை குறித்து யாராவது ஒருவர் மேலோட்டமாக ஆய்வு செய்து எழுதுவதை அப்படியே பலரும் செய்தியாக்கிவிடுகிறார்கள். எனவே பத்திரிகையாளர்கள் எங்களுடைய உயர் அதிகாரிகளோடு தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டு எழுதினால் நன்றாக இருக்கும். ஒருசிலர் விளம்பரப்படுத்துவதற்காக காற்றாலை மின்சாரம் அதிகமாக உற்பத்தியாகிவிட்டது. அதை அரசு பயன்படுத்திக்கொள்ளவில்லை என்று கூறுகிறார்கள். இதனால் உற்பத்தியாளர்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்துகிறார்கள். ஒரு சில மணிநேரங்களில் வேண்டுமென்றால் அப்படிப்பட்ட நிலை இருக்கலாம். மத்திய அரசின் தென்மண்டல மின்கட்டமைப்பும் மின் அதிர்வை கண்காணித்துக்கொண்டிருக்கிறது.
ஒரு முறை வடஇந்தியாவில் மின் அதிவெண்ணை சரியாக பராமரிக்கத் தவறியதால் அதிகமாக மின்சாரம் உற்பத்தியாகி மின் கட்டமைப்புகள் அனைத்தும் முடங்கி வடஇந்திய மாநிலங்கள் முழுவதும் இருளில் முழ்கியது. அதற்கு பிறகு தான் சில கட்டுப்பாட்டுகளை கொண்டுவந்துள்ளார்கள். இவ்வாறு விவாதம் நடைபெற்றது.
(அடிக்கடி அமைச்சர்கள் எழுந்து உறுப்பினரின் நேரத்தில் பேசியதால் - மதுவிலக்கு, சூரிய மின்சக்தி போன்ற விசயங்களில் பதியவிருந்த ஆக்கப்பூர்வமான கருத்துக்களை பதிவு செய்ய வாய்ப்பில்லாமல் போனது)
(அடிக்கடி அமைச்சர்கள் எழுந்து உறுப்பினரின் நேரத்தில் பேசியதால் - மதுவிலக்கு, சூரிய மின்சக்தி போன்ற விசயங்களில் பதியவிருந்த ஆக்கப்பூர்வமான கருத்துக்களை பதிவு செய்ய வாய்ப்பில்லாமல் போனது)
0 கருத்துகள்:
Post a Comment