டாஸ்மாக் பணியாளர்களுக்கு சட்ட உரிமைகளை வழங்கிடவேண்டும் என்று சட்டப்பேரவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் கே. தங்கவேல் கேட்டுக்கொண்டார்.
செவ்வாயன்று (மே 14) எரிசக்தி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறையின் மானியக் கோரிக்கை நடைபெற்ற விவாதத்தில் அவர் பேசியது வருமாறு:
கே.தங்கவேல்: மது விற்பனையில் தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம் மிகப்பெரும் சாதனைகளைச் செய்துவருகிறது. விற்பனை வரி, ஆயட் தீர்வை மூலம் சுமார் 18 ஆயிரம் கோடி வருமானம் ஈட்டிக் கொடுக்கும் துறையாக இருக்கிறது. டாஸ்மாக் ஊழியர்களுக்கு அரசு ஊழியர்களுக்கு நிகரான சலுகைகளுடன், பணிப்பாதுகாப்பை உத்தரவாதப்படுத்த வேண்டுமென குறிப்பிட்டிருந்தார்கள். டாஸ்மாக் கிடங்குளில் பணியாற்றக்கூடிய தொழிலாளர்களுக்கு எந்த வித சலுகையும் இல்லாமல் உள்ளது. அதை வழங்குவதற்கு அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். போனஸ், கருணைத்தொகை, மருத்துவ சிகிக்சை வழங்கப்படவேண்டும். 10 ஆண்டுகளுக்கும் மேல் தொகுப்பூதியத்தால் சுரண்டப்பட்டு வரும் டாஸ்மாக் ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம், ஓவர் டைம் ஊதியம் உள்ளிட்ட சட்ட உரிமைகளை வழங்கிட வேண்டும். ஓய்வூதியம் வழங்கவேண்டும்.
அமைச்சர் விஸ்வநாதன்: மற்ற தொழிலாளிகளை போல் டாஸ்மாக் தொழிலாளர்களுக்கும் அனைத்து வசதிகளும் வழங்கப்படுகின்றன. 20 விழுக்காடு போனஸ் வழங்கப்படுகிறது. மருத்துவ வசதி வழங்கப்படுகிறது. அவர்கள் பணியில் இருந்து இறந்தால் ஒட்டுமொத்த தொகை வழங்கப்படுகிறது. காப்பீட்டுத் தொகையும் வழங்கப்படுகிறது. வருங்கால வைப்பு நிதியும் வழங்கப்படுகிறது. அதற்காக அவர்களின் சம்பளத்தில் 12.5 விழுக்காடு பிடித்தம் செய்யப்படுகிறது. அதே தொகைக்கு இணையாக டாஸ்மாக் இணையமும் கட்டுகிறது. சென்ற ஆண்டிலே அந்த கடையில் எந்த அளவுக்கு விற்பனையானதோ அதை விட கூடுதலாக விற்பனையானால் அந்த தொகையில் 1.7 சதவீதம் அவர்களுக்கு ஊக்கத்தொகையாகவும் வழங்கப்படுகிறது. அந்த வகையிலும் அவர்களுக்கு வருவாய் கிடைக்கிறது. பணியாளர்களுக்கு இவ்வளவு வசதிகள் செய்யப்பட்ட பின்னரும் அவர்கள் ஏதாவது தவறு செய்தால் அவர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுத்தால் உடனடியாக தவறான குற்றச்சாட்டை தொழிற்சங்க வாதிகள் பரப்புகிறார்கள். விற்பனைக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதை எட்ட வில்லை என்பதால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கிறார்கள் என்று தவறான பிரச்சாரம் செய்கிறார்கள். ஒருபோதும் இலக்கு நிர்ணயிக்கப்படுவதில்லை . தவறு செய்யும் பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுத்துத்தான் ஆக வேண்டும். இல்லை என்றால் நிர்வாகத்தை நடத்தவே முடியாது. 28ஆயிரம் பேர் பணி புரிகிறார்கள். எல்லோர் மீதும் நடவடிக்கை எடுப்பதில்லை. யார் தவறு செய்கிறார்களோ அவர்கள் மீது மட்டும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. நடவடிக்கை எடுக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் பணி வழங்கப்பட்டுள்ளது. காற்றாலை மின்சார உற்பத்தியாளர்களுக்கு அரசு பணம் பாக்கி வைத்திருப்பதாக உறுப்பினர் கூறினார். கடந்த செப்டம்பர் மாதம் வரை உள்ள பாக்கி முழுவதும் செலுத்தப்பட்டு விட்டது. பின்னர் ஏற்பட்ட பாக்கிப்பணமும் விரைவில் அவர்களுக்கு தரப்படும். இவ்வாறு விவாதம் நடைபெற்றது.
(அடிக்கடி அமைச்சர்கள் எழுந்து உறுப்பினரின் நேரத்தில் பேசியதால் - மதுவிலக்கு, சூரிய மின்சக்தி போன்ற விசயங்களில் பதியவிருந்த ஆக்கப்பூர்வமான கருத்துக்களை பதிவு செய்ய வாய்ப்பில்லாமல் போனது)
0 கருத்துகள்:
Post a Comment