சென்னை, மே 6-
திருப்பூரில் தொழிலாளர்களுக்கு ஞாயிறு விடுமுறையை உத்திரவாதப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை கே.தங்கவேல் MLA வலியுறுத்தினார்.
திங்களன்று, சட்டமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு அவர் பேசியது வருமாறு:
திருப்பூரின் குடிநீர் தேவையை நிறைவு செய்யும் முதல் குடிநீர் திட்டக் குழாய்கள் 50 ஆண்டுகள் பழமையானவை. இதனால், பம்பிங் செய்யப்படும் குடிநீரில் சரி பாதி விரையமாகிறது. எனவே இந்த குழாய்களை மாற்றி குடிநீர் விரையத்தை தடுக்க வேண்டும்.
இரண்டாம் குடிநீர் திட்ட குழாய்கள் அடிக்கடி பழுதாவதைக் கண்காணித்து சரிப்படுத்த வேண்டும்.
திருப்பூர் மாநகராட்சி முழுவதும் பாதாள சாக்கடை திட்டத்தை விரிவுபடுத்தி, அரசே மேற்கொள்ள வேண்டும்.
திருப்பூரில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறையை உத்தரவாதப்படுத்த வேண்டும். தொழிலாளர்களுக்கு தனித்தனியாக அடுக்குமாடிக் குடியிருப்புகளையும், ஆண், பெண்களுக்கு தனித்தனியாக விடுதி வசதியையும் செய்துதர வேண்டும்.
திருப்பூர் தெற்கு பகுதியில் புதிய பேருந்து நிலையம் ஏற்படுத்தி 3 பேருந்து நிலையங்களையும் இணைக்கும் வகையில் கூடுதலாக நகரப் பேருந்துகளை இயக்கவேண்டும்.
மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக் கல்லூரி ஏற்படுத்துவது என்ற அரசு முடிவின் அடிப்படையில் - திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாக தரம் உயர்த்திட வேண்டும். அதற்கான இட வசதியும் உள்ளது.
தொழிலாளர்கள் பயனடையும் வகையில் இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு இடம் ஒதுக்கப்பட்டது. கட்டுமானப் பணிகளை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சிக்கண்ணா கலை அறிவியல் கல்லூரி, எல்.ஆர்.ஜி கலை அறிவியல் கல்லூரி ஆகியவற்றை மேம்படுத்த சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யவேண்டும்.இவ்வாறு கே.தங்கவேல் பேசினார்.
0 கருத்துகள்:
Post a Comment