Friday 18 July 2014

தொழில்துறை மாநியக் கோரிக்கையின் மீது நடைபெற்ற விவாதத்தின் முழுக் குறிப்பு ...

தமிழக சட்டப்பேரவையில்  திங்களன்று ( ஜூலை 14) நடைபெற்ற தொழில் துறை மானியக் கோரிக்கை மீது நடைபெற்ற முழுமையான விவாதம் பின்வருமாறு:

கே.தங்கவேல்: புதிதாகப் பதவியேற்றுள்ள மத்திய அரசுக்கு மக்கள் நம்பிக்கையோடு வாக்களித்தார்கள். காங்கிரஸ் ஆட்சியில் நிலவிய விலைவாசி உயர்வுக்கும், தொழில்துறை   நெருக்கடிக்கும் தீர்வு கிடைக்கும் என நம்பினார்கள். புதிய அரசோ, காங்கிரசின் கொள்கையிலிருந்து இம்மியும் விலகாமல் செல்கிறது. 

விலைவாசியைக் குறைப்பதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால், மேலும் விலையேற்றத்திற்கு  வழிவகுக்கும் விதத்தில் டீசல் விலை உயர்வையும், வரலாறு காணாத அளவில் 14.2 சதவீதம் பயணிகள் கட்டண உயர்வையும், 15 சதவீதம் சீசன் டிக்கெட் மற்றும் 6.5 சதவீத சரக்கு கட்டண உயர்வையும் செய்திருக்கின்றனர். அவர்கள் தாக்கல் செய்திருக்கும் பொது மற்றும் ரயில்வே நிதிநிலை அறிக்கைகள், அந்நிய மூலதனத்திற்கும், பங்குச் சந்தைக்குமே ஊக்கமளிப்பதாக உள்ளன. இன்னும் கட்டண உயர்வுகள் தொடரும் எனவும், பெட்ரோல் டீசல் விலைகள் தொடர்ந்து உயரும் எனவும் மத்திய நிதியமைச்சர் தனது உரையில் குறிப்பிட்டிருக்கிறார்.

நாட்டின் வளர்ச்சிக்காக 'கடுமையான முடிவுகளை' எடுக்க வேண்டும் என்று சொல்லும் புதிய அரசின் நடவடிக்கைகளால் அத்தியாவசியப் பொருட்களின் விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே உள்ளது.  அதே சமயம் தொழில் உற்பத்தி வளர்ச்சியில் தேக்கமே நீடிக்கிறது. மத்திய அரசின் இத்தகைய முடிவுகள், நாடு முழுவதும் உள்ள தொழில் சூழலிலும், மக்கள் வாழ்வில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும். தமிழக தொழில்துறையையும் அது பாதிக்கும். இந்தச் சூழலில், மத்திய அரசின் கட்டண உயர்வு நடவடிக்கைகளை எதிர்த்த  தமிழக முதல்வர் , மக்களுக்கு சுமை கூட்டும் விதத்திலான நிதி நிலை அறிக்கைகளை "துணிச்சலான பட் ஜட்" என்றும் "எதிர்காலத்திற்கேற்ற பட்ஜெட்" என்றும் கூறி வரவேற்றிருப்பது சரியானதல்ல.  மத்திய தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகளின் பாதையிலேயே, தமிழக அரசும் தொடர்ந்து பயணிப்பது மக்களுக்குக் கடுமையான சுமைகளை ஏற்படுத்தும்.

அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்: மத்திய பட்ஜெட்டை தமிழக முதலமைச்சர் வரவேற்றிருப்பதை தவறு என்று உறுப்பினர்கூறுகிறார். மக்களை பாதிக்கும் மத்திய அரசின் கொள்கைகளை தமிழக அரசு கடுமையாக எதிர்க்கிறது; அதே நேரத்தில் நல்ல அம்சங்களையும் பாராட்டுகிறது. பிரச்சனைகள் அடிப்படையில் எதிர்க்க வேண்டியதை எதிர்க்கிறோம். ஆதரிக்க வேண்டியதை ஆதரிக்கிறோம்.

வெளிப்படையான ஒப்பந்தம் தேவை
கே.தங்கவேல்: தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம் (சிப்காட்), தொழில் நிறுவனங்களை ஈர்த்து பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களைப் போட்டிருக்கிறது. அவற்றில் கனிசமான அந்நிய நிறுவனங்கள் உள்ளன. இதன் காரணமாக அதிகம் நகர்மயமாகி, "இந்தியாவின் டெட்ராய்ட்" என்று பெயரெடுக்கும் விதத்தில் தமிழகம் உள்ளதாக சென்ற ஆண்டின் கொள்கைக் குறிப்பு பெருமிதத்துடன் தெரிவித்தது. இந்த ஆண்டுக் குறிப்பில் அந்த வாசகம் இல்லை.  ஏனென்றால், அமெரிக்காவின் தொழிற்சாலை நகரமான டெட்ராய்ட் தற்போது நிதி நெருக்கடியில் சிக்கியிருக்கிறது. அங்கு செயல்படும் நிறுவனங்கள் தங்கள் தொழிற்சாலைகளை இடம்மாற்றவும், பல்லாயிரம் தொழிலாளர்களை வீட்டுக்கு அனுப்பவும் முடிவு செய்துள்ளன. அமெரிக்க அரசு தலையிட்டு, அந்த நகரை பழைய நிலைக்கு மீட்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது. இந்தியாவிலும், மாநிலங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொள்ளும் நிறுவனங்கள் சலுகைகளை அனுபவிக்கின்றன. சலுகைக் காலம் முடிந்ததும், மீண்டும் சலுகைகளைத் தேடி வேறு மாநிலத்திற்கு மாறிச் செல்ல தடையேதுமில்லை. இதனால் தொழிலாளர்கள் வேலை இழப்பதும், அரசுக்கு இழப்பும் ஏற்படுகிறது. சென்றமுறை இதுகுறித்து பேசிய  அமைச்சர் , ஆந்திரமும் பிற மாநிலங்களும் நம்மை விட கூடுதலான சலுகைகள் கொடுத்து, முதலீட்டை ஈர்க்க முயல்கின்றன என்றும், அதனால் பன்னாட்டு நிறுவனங்களுக்கு சலுகை கொடுக்க வேண்டியுள்ளது என்றும் தெரிவித்தார். மத்திய அரசின் சட்டங்கள் அதற்கு ஏதுவாகத்தான் இருக்கின்றன.  அமெரிக்காவின் டெட்ராய்ட் நகரம் போன்ற நிலை தமிழகத்திற்கு ஏற்படாமல் தடுக்க வேண்டுமென்றால், அந்நிய மூலதனத்திற்கும், தனியார் பெரு நிறுவனங்களுக்கும் அவசியமான கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும்.

முதலீடு காரணமாக வேலைவாய்ப்புகள் பெருகினால், அது மகிழ்ச்சிக்குரியது. அதன் பெயரால் அரசின் சலுகைகளைப் பெறும் நிறுவனங்கள் இத்தனை ஆண்டுகள் தொடர்ந்து செயல்பட வேண்டும், இத்தனை பேருக்கு வேலை வழங்க வேண்டுமென நிபந்தனை விதிக்க முடியாதென்றால், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி எப்படி ஏற்படும்?  அரசுக்கும் நிறுவனங்களுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்த விபரங்கள் வெளிப்படையாக இல்லை. தொழிலாளர்களுக்கும், மக்களுக்கும் புரியாத ஒப்பந்தங்களாகவே அவை இருக்கின்றன. இதனால் சலுகைசார் முதலாளித்துவம் வளர்கிறது. தவறுகளுக்கு வழி ஏற்படுகிறது.

தொழில்துறை அமைச்சர் தங்கமணி: தமிழகத்தில் முதலீடு செய்யமுன்வரும் தொழில் நிறுவனங்களுடன் மாநில அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் போடும் போது இவ்வளவு பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கவேண்டும் என்று விதிகளையும் சேர்த்துள்ளோம். அதில் ஒருவருக்கு வேலை தரமறுத்தால் கூட அந்த நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட சலுகைகளை திரும்பப்பெற்றுக்கொள்ள அரசுக்கு அதிகாரம் உள்ளது. பன்னாட்டு நிறுவனங்களுக்கு மட்டுமல்ல உள்நாட்டில் உள்ள தனியார் நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு செய்தாலும் சலுகைகள் வழங்கப்படும். குறிப்பாக தென்மாவட்டங்களில் முதலீடு செய்ய முன்வரும் நிறுவனங்கள் ரூ.5கோடியில் இருந்து ரூ.10 கோடி வரை முதலீடு செய்தாலும் சலுகைகள் வழங்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்துள்ளார். போட்டி நிறைந்த உலகில் நிறுவனங்களை ஈர்க்க பல சலுகைகளை அளிக்கவேண்டியுள்ளது.

கே.தங்கவேல்: உதாரணமாக, ஸ்ரீபெரும்புதூரில் தொழில் தொடங்கிய நோக்கியா நிறுவனம், தமிழக அரசிடமிருந்து 3 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சலுகைகளும், மத்திய அரசிடமிருந்து ஆண்டுக்கு 300 கோடி ரூபாய் மதிப்பில் சலுகைகளும் பெற்றனர். முதல் ஐந்தாண்டுகளில் 10 ஆயிரம் கோடி ரூபாய் லாபமீட்டினர். அத்தோடு அல்லாமல், சுமார் 23 ஆயிரம் கோடி வரி இழப்பையும் ஏற்படுத்தி, பின் அதன் காரணமாக தொழிற்சாலையை முடக்கும் நிலைக்குச் சென்றுள்ளனர்.
அமைச்சர் தங்கமணி: நோக்கியா நிறுவனத்திற்கு  தமிழக அரசு 3000 கோடி ரூபாய் அளவுக்கு சலுகைகள் வழங்கியுள்ளதாக உறுப்பினர் கூறுகிறார். புரிந்துணர்வு ஒப்பந்தத்தை கூறப்பட்டுள்ள சலுகைகளை தவிர ஒரு ரூபாய் கூட அதிகமாக அந்த நிறுவனத்திற்கு சலுகைகள் வழங்கப்படவில்லை.

கே.தங்கவேல்: 650 கோடி ரூபாய் முதலீடு செய்த நோக்கியா சுமார் 35 ஆயிரம் கோடி ரூபாய் ஆதாயம் பெற்றது. தற்போது தன் நிறுவனத்தை மைக்ரோசாப்ட் நிறுவனத்திடம் கைமாற்றிவிட்டது. நம்பிக்கையோடு பணிக்குச் சேர்ந்த தொழிலாளர்களுக்கோ, 25 வயதில் விருப்ப ஓய்வு வழங்கப்படுகிறது என்றால் - நாம் அடைந்த பலன் என்ன?

வெள்ளியன்று நடைபெற்ற விவாதத்தில்  தொழில்துறை அமைச்சர் முந்தய காங்கிரஸ் அரசின் சதியால் நோக்கியா நிறுவனம் மூடப்பட்டதாகத் தெரிவித்தார். புது தில்லி, உயர்நீதிமன்றம் அளித்துள்ள இடைக்காலத் தீர்ப்பில், நோக்கியா செய்த முறைகேடுகள் உறுதியாகியுள்ளதை அவரின் கவனத்துக்கு கொண்டுவர விரும்புகிறேன். 

தமிழகத்தின் தென்மாவட்டங்களில் 9 தொழிற்பூங்காக்களை ஏற்படுத்த முடிவு செய்தபோதும்  அங்கு முதலீடுகளை ஈர்க்க முடியவில்லை. தற்போது,  கூடுதல் சலுகைகளை வழங்க அரசு முடிவு செய்திருக்கிறது. தொழிலாளர்களை கூடுதல் நேரம் வேலை வாங்கவும், பெண் தொழிலாளர்களை இரவுப் பணிக்கு அமர்த்தவும், ஒப்பந்தத் தொழிலாளர் முறையை பின்பற்றவும் அனுமதிப்பது என தொழிலாளர் நலன்களில் சமரசம் செய்கிறது. சலுகைகள் கொடுப்பதால் வரும் முதலீடு நிரந்தரமானதா? தமிழக மக்களுக்கு அது நலன் தருமா? - ஒரு பானை சோற்றுக்கு நோக்கியா ஒரு பதம்!.

அ.சவுந்தரராசன்: நோக்கியா நிறுவனத்திற்கு இது வரை தமிழக அரசு சலுகைகள் தரவில்லை என்றாலும் அந்த நிறுவனத்திற்கு தமிழக அரசிடமிருந்து வரவேண்டிய சலுகைகள் 650கோடி ரூபாய் நிலுவையில் உள்ளது. புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி அந்த சலுகையை அந்த நிறுவனம் எப்போது வேண்டுமானலும் தமிழக அரசிடம் பெற்றுக்கொள்ளமுடியும். இதைத்தான் நாங்கள் குறிப்பிடுகிறோம். மேலும் நோக்கியா நிறுவனத்தின் பிரச்சனையில் தமிழக அரசு எப்படி பொறுப்பேற்க முடியும் என்ற மாநில அரசின் நிலைப்பாட்டையும் நாங்கள் ஏற்கவில்லை.

அமைச்சர் தங்கமணி: நோக்கியா நிறுவனம் 95 கோடி ரூபாய்க்கு மாநிலஅரசிடம் ஈசி கொடுத்துஇருக்கிறார்கள். அது உண்மைதான்.

அ. சவுந்தரராசன்: நோக்கியா நிறுவனத்தில்வேலை செய்த 8 ஆயிரம் பேர் வேலை பறிபோயுள்ளது. இந்த விஷயத்தில் மாநில அரசுக்கு பொறுப்பு இல்லையா? இந்தப் பிரச்சனையில் தலையிடுமாறு தொழிலாளர் நலத்துறைக்கும் மாநில முதலமைச்சருக்கும் கடிதம் எழுதியும் நடவடிக்கை இல்லை. அதனால் தான் இங்கே அந்த பிரச்சனையை கூறவேண்டியுள்ளது.

கே.தங்கவேல்: தென்மாவட்டங்களில் தொழில் வளர தேவையான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும். குறிப்பாக, சேது சமுத்திரக் கால்வாய் திட்டத்தை நிறைவேற்றுவது அவசியம். மேலும், தமிழகத்தில் உள்ள தனியார் கனிம வள நிறுவனங்கள், இந்தியாவிலேயே அதிக அளவில் கனிமங்கள் எடுத்து ஏற்றுமதி செய்துள்ளன. அந்த நிறுவனங்கள் கனிம வளங்களை விதிகளை மீறியும் சுரண்டியுள்ளன. இது தொடர்பாக முதலில் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, திருச்சி மற்றும் மதுரை மாவட்டங்களில் உள்ள குவாரிகளில் ஆய்வு நடத்த முதலமைச்சர் உத்தரவிட்டார். இந்த முறைகேடுகளின் மதிப்பு லட்சம் கோடிகளில் இருக்கலாம் என்ற செய்தி நம்மை அச்சுறுத்துகிறது. அரசுத் தரப்பில் ஆய்வுகள் முடிந்த பிறகும், ஆய்வறிக்கை விபரங்கள் ரகசியமாக உள்ளன. ஒருபக்கம் அரசுக்கு இழப்பையும், மறுபக்கம் சுற்றுச் சூழல் பாதிப்பையும் ஏற்படுத்தியிருக்கும் அந்த முறைகேடுகளை மக்களுக்கு பகிரங்கப் படுத்த அரசு ஏன் அஞ்சுகிறது?

கனிம மணல், கிரானைட் கற்கள் மற்றும் ஆற்று மணல் கொள்ளைகளில் ஈடுபட்டுள்ளவர்களை சட்டப்படி தண்டிப்பதுடன், அரசுக்கு ஏற்பட்டுள்ள இழப்பை கறாராக வசூலிக்க வேண்டும். இத்துறைகளில் தனியார் ஈட்டும் லாபம் பல்லாயிரம் கோடியாக இருக்கிறது. அரசு கனிம நிறுவனங்களின் லாபமோ சில நூறு கோடிகளில் மட்டுமே இருக்கிறது. 2023 ஆண்டு வரை தொலைநோக்குத் திட்டம் வகுத்து செயல்படும் அரசு, வேலைவாய்ப்பையும், உற்பத்தியையும் பெருக்கும் திட்டங்களுக்காக நிதி இல்லாமல் தவிக்கிறது. மறுபக்கம் நமது இயற்கை வளங்கள் வரன்முறையற்று சுரண்டப்படுகின்றன. சிலரது கைகளிலேயே இருக்கும் கனிம, இயற்கைவள வர்த்தகத்தை அரசுடைமையாக்கி, உள்நாட்டிலேயே தொழிற்சாலைகளை ஏற்படுத்துவதன் மூலம், ஏற்றுமதியைக் கட்டுபடுத்தினால், தொழில் ஆதாரங்களை பெருக்கலாம், இது குறிப்பாக தென் மாவட்டங்களை மேம்படுத்தும்.
சிவரக்கோட்டையில் `சிப்காட் அமைப்பதை விவசாயிகள் தொடர்ந்து எதிர்த்துவருகின்றனர். மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் இப்பிரச்சனை மன்றத்தில் பலமுறை எழுப்பப்பட்டுள்ளது. மாண்புமிகு அமைச்சர் அவர்கள் வாக்குறுதியளித்த பிறகும், அதற்காக பிறப்பிக்கப்பட்ட அரசாணை இதுவரை ரத்து செய்யப்படவில்லை. அதற்காக நியமிக்கப்பட்ட வட்டாட்சியரையும்  விலக்கிக்கொள்ளவில்லை. முந்தைய அரசு பிறப்பித்த ஆணையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.
விளை நிலங்களை எடுக்காமல் தரிசு நிலத்தில் 'சிப்காட்' தொழிற்பேட்டைகள் ஏற்படுத்துவோம் என்ற உறுதியை அரசு பின்பற்ற வேண்டும். விளை நிலங்களை கைப்பற்ற நேர்ந்தால் உரிய இழப்பீடு வழங்குவதுடன் விவசாயத் தொழிலாளர்கள் வேலை இழப்பதைக் கணக்கில் கொண்டு, இழப்பீடும், வேலை உத்திரவாதமும் வழங்க வேண்டும்.
சலுகைகள் பெற்று தமிழகத்தில் தொழில் தொடங்கியுள்ள  பன்னாட்டு மற்றும் பெரும் நிறுவனங்கள் சுமார் 2 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை வழங்கியிருக்கின்றன. ஜவுளி, ஆயத்த ஆடை, விசைத்தறி, தோல் பதனிடுதல் என உள்நாட்டு தொழில் உற்பத்தி நிறுவனங்களோ 50 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பைக் கொடுக்கின்றன. பஞ்சை ஏற்றுமதி செய்யக்கூடிய மத்திய அரசின் மோசமான கொள்கைகளால் ஜவுளித்தொழில் கடுமையாக பாதித்திருக்கிறது. ஏற்கனவே, உள்நாட்டு உற்பத்தித் துறை தேக்கமடைந்திருக்கும் சூழலில் மத்திய அரசின் கொள்கைகளில் மாற்றம் ஏற்பட வேண்டும். பொதுத்துறை மற்றும் கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில், கரும்பு விவசாயிகளுக்கு உள்ள பாக்கித் தொகைளை உடனடியாக வழங்க வேண்டும். விவசாயிகளுக்கும், நிர்வாகத்துக்கும் இணக்கமான சூழலை ஏற்படுத்தினால்தான் அவற்றின் லாபத்தை அதிகரிக்க முடியும்.

'மொலாசஸ்' எனப்படும் சர்க்கரை ஆலைக் கழிவு விற்பனையில் கவனம் செலுத்தினால் தற்போதுள்ளதை விட கூடுதல் வருமானம் ஈட்ட முடியும். எத்தனால் மற்றும், எரிசாராய உற்பத்தியை அரசே தொடங்குவது வரவேற்புக்கு உரியதாகும். அனைத்து கூட்டுறவு ஆலைகளிலும் இத்திட்டத்தை விரிவாக்க வேண்டும். சர்க்கரை ஆலைத் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தவும், பிழிதிறனுக்கு ஏற்ப தொழிலாளர்களை அதிகரிக்க வேண்டும்.

கே.தங்கவேல்: திருப்பூர், கோவை, ஈரோடு மாவட்டங்களை மையப்படுத்தி மெட்ரோ ரயில் மற்றும் இணைப்புச் சாலைத் திட்டங்களை ஏற்படுத்த வேண்டும்.
விசைத்தறி ஜவுளி உற்பத்தியை ஊக்கப்படுத்தும் விதத்தில் திருப்பூர் மாவட்டம் தெக்கலூரில் அறிவிக்கப்பட்ட ஜவுளிச் சந்தையை செயல்படுத்த வேண்டும். இந்த சந்தையில் உற்பத்திச் சரக்கை அடமானமாகப் பெற்று, குறைந்த வட்டியில் கடன் கொடுக்கும் வகையில் செயல்படுத்த வேண்டும்.
விசைத்தறிகளை நவீனமாக்க வார்ப்பு வெப்ட் இணைத்தல், 4 நாடாக்கள் பொருத்தும் விதத்தில் நவீன ட்ரா பாக்ஸ் பொருத்துதல், நாடா இல்லாத தறி அமைத்தல் ஆகியவற்றிற்கு அரசு மானியம் வழங்க வேண்டும்.
திருப்பூர், கோவை, உள்ளிட்ட பகுதிகளில் சர்வதேச வர்த்தகர்கள் வந்து செல்ல விதத்தில் கோவை விமான நிலைய விரிவாக்கம் அவசியமாகும். இதற்கு மாநில அரசு தரப்பிலான பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.
இவ்வாறு இந்த விவாதம் நடைபெற்றது.

0 கருத்துகள்:

Post a Comment

பிரபல பதிவுகள்

அகழ்வாய்வு (1) அடிப்படை வசதிகள் (5) அரசியல் (14) அரசு பள்ளி (2) அரசு மருத்துவமனை (3) ஆண்டு விழா (1) ஆறுகள் (1) உள்கட்டமைப்பு (2) உள்ளாட்சித் துறை (1) ஏற்றுமதியாளர் சங்கம் (1) ஓமியோபதி மருந்து (1) கடிதம் (3) கட்டுரை (1) கல்வி (3) கவன ஈர்ப்பு தீர்மானம் (1) கழிப்பிடம் (1) கழிவுகள் (1) குடிநீர் (4) குடிநீர் கட்டணம் (1) குடிமனைப்பட்டா (1) குழாய் உடைப்பு (1) கூட்டுறவு தேர்தல்கள் (1) கே.தங்கவேல் MLA (37) கொங்கு மண்டலம் (1) சட்டமன்ற உரை (18) சட்டமன்ற கேள்விகள் (8) சாக்கடை (2) சாதி அரசியல் (1) சாயக் கழிவு (2) சாஸ்த்ரா பாக்டீரியா (1) சிப்காட் (1) சிற்பக் கலை (1) சுகாதாரம் (3) சுங்கவரி (1) சுரங்கப்பாதை. (1) செக்யூரிட்டி தொழிலாளர் (1) செய்தி (6) செய்திகள் (25) செவிலியர் (1) சேதுக்கால்வாய் (1) டெங்கு காய்ச்சல் (1) டெட்ராய்ட் (1) தனியார்மயம் (2) தாது மணல் கொள்ளை (1) தால்சீமியா (1) திருப்பூர் (3) திருப்பூர் கோரிக்கைகள் (1) திருப்பூர் தெற்கு தொகுதி (3) திருப்பூர் மாநகராட்சி (1) துப்புரவு தொழிலாளர் (1) துறைமுகங்கள் (1) தென் மாநிலம் (1) தொழிலாளர் (9) தொழில் (8) தொழில்துறை (1) நிகழ்வு (1) நிகழ்வுகள் (17) நிதி (1) நெடுஞ்சாலைகள் (3) நேரடி ஆய்வு (5) நொய்யலாறு (2) பத்திரப்பதிவு (2) பிரசுரம் (11) பேட்டி (2) பொது முதலீடுகள் (1) பொதுப்பணித்துறை (1) போக்குவரத்து (1) மக்கள் கோரிக்கை (7) மக்கள் கோரிக்கை மாநாடு (3) மக்கள் சந்திப்பு (9) மத்திய பட்ஜெட் (1) மருத்துவமனை (1) மருத்துவம் (1) மாசுபடுதல்.குடிநீர். (1) மாநகராட்சி (2) மாவட்ட ஆட்சியர் (1) மின்சாரம் (1) மின்வெட்டு (4) மெட்ரோ ரயில் (1) மேம்பாலம் (1) ரயில்வே (1) ரயில்வே கேட் (1) ரேசன் அட்டை (1) வணிகவரி (1) வருவாய்த்துறை (1) வாக்குறுதிகள் (1) வாழ்த்துரை (2) வியாபாரிகள் (1) விவசாயம் (4) வெள்ளம் (1)